மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் ரேவ் பார்டி நடைபெற உள்ளதாகவும் இதில் போதைப் பொருட்கள் பயன்படுத்த உள்ளதாகவும் கடந்த மாதம் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலை அடிப்படையாகக் கொண்டு மாறுவேடத்தில் சொகுசு கப்பலில் ஏறிய என்சிபி அதிகாரிகள், அங்கு ம் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி பார்டி நடப்பதை உறுதி செய்தனர். கப்பலில் நடந்த கேளிக்கைவிருந்தின்போது, போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் (23) உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இரண்டாம் கட்டமாக இந்த வழக்கில் மேலும் சிலரையும் கைது செய்தனர். இதுவரை இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் 23 வயது மகன் ஆர்யன் கானும் கைது செய்யப்பட்டார். இந்தச் சூழலில் ஜாமீன் கோரி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆர்யன் கான் மனுத் தாக்கல் செய்திருந்தார்.



இந்த வழக்கு மீதான விசாரணை இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. முன்னதாக நேற்றைய விசாரணையில் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கத் தேவையில்லை என்று தெரிவித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் கோரினர். இந்நிலையில், ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று (அக்.14) விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்யன் கான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இது பொய்யான வழக்கு. ஆர்யன் கானை ஜாமீனில் விடுவிப்பது விசாரணையை எந்த விதத்திலும் பாதிக்காது. கைது செய்யப்பட்ட போது ஆர்யன் கானிடம் போதைப்பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று வாதிட்டார். ஆனால் என்சிபி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆர்யன் கான் நீண்ட காலமாகவே போதைப் பொருளை பயன்படுத்தி வந்துள்ளார். அவருக்கு போதை மருந்து உட்கொள்ளும் பழக்கம் இருக்கிறது. அவரது வாட்ஸ் அப் உரையாடல்கள் சந்தேகத்துக்கு இடமான வகையில் உள்ளன.



அவரை ஜாமீனில் விடுவித்தால் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சாட்சிகளைக் கலைப்பார். காந்தி தேசத்தின் ஆர்யன் கான் போன்ற இளைஞர்கள் போதை மருந்து உட்கொண்டு சீரழிவது வேதனையான விஷயம் என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான உத்தரவை வரும் அக். 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இன்று (அக். 15) தொடங்கி அக். 19 வரை அடுத்த நான்கு நாட்கள் துர்கா பூஜை மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை தினங்களாகும். இதனால் வழக்கு விசாரணையை அக். 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை முடிந்ததும் தனது தாய் கௌரியுடனும் தந்தை ஷாருக்கானுடனும் விடியோ காலில் பேசியிருக்கிறார் ஆர்யன் கான்.