பாலிவுட்டின் மிகவும் பிரபலமான நடிகரான ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் சமீப காலமாக தலைப்பு செய்திகளில் இருந்து வருகிறார். ஒரு மாஸ் ஹீரோவின் மகன் ஆர்யன் தனது தந்தையை போலவே சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார். ஆனால் நடிகராக இல்லாமல் ஒரு இயக்குநராக அறிமுகமாகப்போவதாக சமீபத்தில் அறிவித்தார். 25 வயதாகும் ஆர்யன் மேலும் ஒரு புதிய முயற்சியை தொடங்கப்போவதாக ஒரு தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆர்யனின் லேட்டஸ்ட் பிசினஸ் மூட் :
இயக்குநராக தனது பயணத்தை தொடங்க போகிறேன் என கூறிய ஆர்யன் கான், அடுத்ததாக தனது நண்பர்களுடன் இணைந்து வோட்கா தொழிலில் ஆரம்பிக்கப்போவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரீமியம் பிராண்டான வோட்காவை நமது மது பிரியர்களுக்காக அறிமுகப்படுத்தவுள்ளார். இது சம்பந்தமாக ஆர்யன் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் சிலர் மதுபான நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் என கூறப்படுகிறது. ஆர்யன் கான் அவரின் பார்ட்னர்களான லெட்டி பிளாகவா மற்றும் பன்டி சிங் மற்றும் பலருடன் இணைந்து இந்த பிரீமியம் பிராண்ட் வோட்கவை அறிமுகப்படுத்தும் வேலையில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர் என கூறப்படுகிறது.
ஆர்யன் கான் அவருடைய தந்தையை போல ஒரு நடிகராக ஜொலிக்க விரும்பாமல் ஒரு தொழிலதிபராக பிரபலமாக வேண்டும் என நினைக்கிறார்.
ஆர்யனை சுற்றிய சர்ச்சை :
அவ்வப்போது ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வந்த ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டு 20 நாள்களுக்கும் மேலாகச் சிறையில் வைக்கப்பட்டு இருந்தார். பின்னர் நடந்த விசாரணைக்கு பிறகு அவர் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இப்படி பல சிக்கல்களில் சிக்கி தவித்த ஆர்யன் கான் மற்றும் அவரின் குடும்பத்தினர், சமீபகாலமாகத்தான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் தலை காட்ட துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.