ஆர்யா நடிப்பில் இறுதியாக வெளியான சார்ப்பட்டா பரம்பரை , அரண்மனை 3 உள்ளிட்ட படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. குறிப்பாக சார்ப்பட்டா பரம்பரை படத்திற்காக ஆர்யா மிகுந்த மெனக்கடல்களை செய்திருந்தார். அடுத்ததாக ஆர்யா மற்றும் விஷால் காம்போவில் உருவாகியுள்ள திரைப்படம் எனிமி. இந்த திரைப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக இல்லாமல் வில்லனாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற தீபாவளி பண்டிகை அன்று திரையரங்கில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஆர்யாவின் 33 வது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த படத்தை ஆர்யா நடிப்பில் வெளியான டெடி பட இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கவுள்ளார். படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களை தவிர நடிகை சிம்ரன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அவரது கதாபாத்திரம் படத்திற்கு கூடுதல் பலம் என கூறப்படுகிறது.
தற்போது பெயர் வைக்காமல் தொடங்கியுள்ள ஆர்யா 33 திரைப்படத்தை think studio -உடன் இணைந்து ஆர்யாவின் The Show People நிறுவனமும் தயாரிக்கவுள்ளது. சையின்ஸ் ஃபிக்சன் ஜானரில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு தற்போது தேசிய விருது வென்ற டி.இமான் இசையமைக்கவுள்ளார்.படத்தின் முதற்கட்ட பூஜை புகைப்படங்கள் வெளியான நிலையில், அடுத்ததாக படத்தில் டைட்டில் கார்டுடன் சேர்ந்து , ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஆர்யா , இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த படம் ஆர்யாவின் 34 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் நலன் குமாரசாமி சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற படங்களை இயக்கியுள்ளார். மேலும் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் ஒரு பகுதிக்கு திரைக்கதை எழுதியிருந்தார். இந்த படத்தை பிரபல ஸ்டூடியோ கிரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது நடைப்பெற்று வரும் சூழலில் படம் அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் அனைத்து வணிக ரீதியிலான படங்களுக்கும் சமர்ப்பணமாக இருக்கும் என எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் நலன் குமாரசாமி. படத்தின் சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.