மார்க் ஆண்டனி படத்திற்காக படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஏழு ஆண்டுகள் தனது கால்ஷீட்டுக்காக காத்திருந்ததாக தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.


மார்க் ஆண்டனி


விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், ரிது வர்மா ஆகியோர் நடிப்பில் வரும் செப்.15ஆம் தேதி வெளியாகும் திரைப்படம் மார்க் ஆண்டனி. த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன், அசராதவன் படங்களை எடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.


தெலுங்கு நடிகர் சுனில் குமார், செல்வராகவன், அபிநயா, ரெட்டின் கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மார்க் ஆண்டனி படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


தொலைபேசி வழியாக நடக்கும் டைம் ட்ராவல் நடக்கும் காட்சிகளாக கதை அமைக்கப்பட்டுள்ளது நேற்று இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் விஷாலின் நெருங்கிய நண்பரான நடிகர் ஆர்யா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:


விஷால்கிட்ட பிடிச்சது இதுதான்!


 “விஷாலும் நானும் சின்ன வயதில் இருந்தே நண்பர்கள் தான். அவர்கிட்ட எனக்கு ரொம்ப பிடித்த ஒன்று என்றால் அவருடைய கட்ஸ்தான். இந்த உலகம் நாளைக்கே அழியப் போகிறது என்று அவரிடம் சொன்னால் ‘அவ்ளோதான பாத்துக்கலாம்’ என்பது தான் அவரது பதிலாக இருக்கும்.


பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் எனக்கு திடீரென்று விஷால் ஃபோன் செய்தார். மச்சான்.. கார்த்தி, விஷ்ணு, ஜீவா நம்ம ஃப்ரண்ட்ஸ் எல்லாரையும் வர சொல்லு, நம்ம எல்லாரும் சேர்ந்து டான்ஸ் ஆடுன பில்டிங்க இடிக்கப் போறாங்க” என்றார்.


நாங்கள் அனைவரும் சேர்ந்து  நடிகர் சங்கம் கட்டிடத்தை  காப்பாற்றினோம். அடுத்து சில நாட்களுக்குப் பிறகு “தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிறைய பிரச்னைகள் இருக்கிறது, அதை எல்லாம் சரி செய்யணும்” என்றார்.  இப்படி தொடர்ந்து ஏதாவது ஒன்றை செய்துகொண்டு இருப்பவர். இந்தப் படம்  நிச்சயம் மிகப்பெரிய வெற்றியடையும் என நம்புகிறேன்“ என்று ஆர்யா பேசினார்.


எஸ்.ஜே சூர்யா இப்படி..


தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா குறித்து பேசிய ஆர்யா “எஸ். ஜே சூர்யா இயக்குநராக இருக்கும்போதே நான் அவரிடன் நடிக்க நிறைய முறை வாய்ப்புகள் கேட்டு போயிருக்கிறேன். அவரது நியூ படத்தில் நான் வேலை செய்திருக்கிறேன். அவரிடம் வாய்ப்பு கேட்கும்போதெல்லாம் தான் யாரையும் வைத்து படம் பண்ணவில்லை என்றும், நடிப்பதில் தான் தனக்கு ஆர்வம் என்று சொல்வார்.


நிறையப் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அவருக்கும் வந்திருக்கின்றன. நிறைய தயாரிப்பாளர்கள் அவரிடம் கதை சொல்லிவிட்டு திரும்பி வருவார்கள், என்னவென்று கேட்டால் படத்தின் பட்ஜட்டையே அவர் சம்பளமாக கேட்கிறார் என்பார்கள். எஸ்.ஜே சூர்யாவின் திறமைக்கு நிச்சயம் ஒரு மிகப்பெரிய மதிப்பு இருக்கிறது தான். இந்தப் படத்தில் அவரது நடிப்பு நிச்சயம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்” என்று அவர் கூறினார்.