ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ள ‘ஜெய்லர்’ திரைப்படம் உலக அளவில் வசூலில் ரூ.600 கோடியை நெருங்க இருக்கிறது.


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த மாதம் 10-ம் தேதி வெளியானது. தமன்னா, ரம்யாகிருஷ்ணன, சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்ஜி ஷெராஃப் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப் படம் வெளியானதில் இருந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம் வெளியான முதல் நாளே உலக அளவில் ரூ.78 கோடியை வசூலித்தது. வார இறுதி நாட்களில் படத்துக்கான வரவேற்பு அதிகரித்தது. படம் வெளியான நான்கு நாட்களில் உலக அளவில் ரூ.300 கோடியை வசூலித்துள்ளதாகவும், இந்திய அளவில் ரூ.148 கோடி வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியானது. 


இந்நிலையில், படம் வெளியாகி 25 நாட்களில் இந்திய அளவில் ரூ.332.82 கோடி வசூலில் சாதனை படைத்துள்ளது. உலக அளவில் ரூ,579 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வாரத்தில் ரூ.600 கோடியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இது ரஜினியின் 4-ஆவது ரூ.300 கோடி பாக்ஸ் ஆஃபீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.


திரையரங்குகளில் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று ஜெயிலர் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில், வரும் செப்டம்பர் 7ஆம் தேதி இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் குஷி, லக்கிமேன், கருமேகங்கள் கலைவதில்லை, பரம்பொருள்,கிக் உள்ளிட்ட படங்கள் வெளியானாலும், ஜெய்லர் கொண்டாட்டம் திரையரங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ரசிகர்கள் ‘ஜெய்லர்’ திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். ’தலைவர்’ கொண்டாட்டம் வரும் வாரங்களிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


ஏற்கெனவே நடிகர் ரஜினிகாந்தின் 2.0 படம் 500 கோடிகளுக்கு மேல் வசூலித்த நிலையில், ஜெயிலர் திரைப்படம் 500 கோடி வசூலித்த ரஜினியின் இரண்டாவது படமாக உருவெடுத்துள்ளது.


மேலும் சென்ற ஆண்டு 487.50 கோடிகள் வசூலை வாரிக் குவித்து சென்ற ஆண்டு சாதனை படைத்த பொன்னியின் செல்வன் படத்தின் வசூலை ஜெயிலர் முறியடிக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , அந்த சாதனையையும் ஜெயிலர் தற்போது கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளை வெளியிடும் sacnilk தளம் ஜெயிலர் திரைப்படம் இந்தியாவில் மட்டும் சுமார் 332.82 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், சன் பிச்சர்ஸ் நிறுவனம் உலக அளவில் 525 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தது. 




ஜெய்லர் திரைப்படம் - கார் பரிசு


கோலிவுட்டின் மாபெரும் வெற்றிப்படமாக ஜெயிலர் உருவெடுத்துள்ள நிலையில், ரஜினிகாந்த் ரசிகர்கள் இந்த வெற்றியைக் மகிழ்ச்சியாக கொண்டாடி  வருகின்றனர். இந்நிலையில் ஜெயிலர் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸின் நிறுவனர் கலாநிதி மாறன், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்தினார்.


ஜெயிலர் படத்தின் பிரம்மாண்டமான வெற்றியை முன்னிட்டு ரஜினிகாந்துக்கு ரூ.1.24 கோடி மதிப்புள்ள BMW x7 ரக சொகுசு காரை அவருக்கு பரிசாக வழங்கியுள்ளார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன். ரஜினியிடம் 1.24 கோடி மதிப்புள்ள BMW x7 மற்றும்  BMW i7 ஆகிய இரண்டு ரக சொகுசு கார்களை காட்டி அதில் ஒன்றை தேர்வு செய்யுமாறு கலாநிதி மாறன் கேட்டுக் கொண்டார். அதில் ரஜினிகாந்த் BMW x7 தேர்வு செய்தார்.