ஆர்யா நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான திரைப்படம் அரண்மனை 3. இந்த திரைப்படத்தை குஷ்பு தயாரித்திருந்தார். குஜராத் மாநிலத்தில் பிரம்மாண்ட செட் அமைத்து அரண்மனை 3 திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. படத்தில் ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், மனோபாலா, யோகி பாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். படம் நல்ல பாக்ஸ் ஆஃபிஸ் வசூலையும் குவித்தது. அரண்மனை 3 சின்ன கலைவாணர் என கொண்டாடப்பட்ட விவேக் அவர்களின் இறுதி படமாக அமைந்துவிட்டது. அந்த படத்தில் யோகி பாபுவுடன் இணைந்து இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருப்பார் விவேக் .
இந்தநிலையில் நடிகர் ஆர்யா , விவேக்குடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.அதில் “அரண்மனை 3 இல் விவேக் சாருடன் நடித்தது எனக்கு மிகப்பெரிய பாக்கியம் என நினைக்கிறேன்.நிறைய வருடங்களாக தனிப்பட்ட முறையில் அவரை எனக்கு நன்றாக தெரியும். ஆனால் அவரோட நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததே இல்லை.அரண்மனை 3 இல் அவருடன் நடித்தது எனக்கு கனவுகள் நினைவானது மாதிரித்தான். அவர் மிகப்பெரிய லெஜெண்ட். அதோட நான் அவரின் தீவிர ரசிகர். இந்த படத்துல எனக்கு அவரோட நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. விவேக் சாரோட 30 நாட்கள் ஷூட்டிங் இருந்துச்சு குஜராத்ல, அது எனக்கு மறக்கமுடியாத நினைவுகளா இருந்துச்சு.நான் அவர உண்மையிலேயே ரொம்ப மிஸ் பண்ணுறேன்” என தெரிவித்துள்ளார்.
ஜனங்களின் கலைஞன், சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படும் கலைமாமணி விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 17ம் தேதி காலமானார். கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வில் ஈடுபட்டிருந்த அவர், மாரடைப்பு காரணமாக ஏப்ரல் 16ம் தேதி காலை சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு எக்மோ பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் திரையுலகை சேர்ந்தவர்கள் , ரசிகர்கள் என அனைவருக்குமே பேரதிர்ச்சியாக இருந்தது. அப்துல்கலாமின் வார்த்தைகளை அப்படியே பின்பற்றிய விவேக் நிறைய சமுதாய தொண்டுகளையும் செய்து வந்தார். மரம் நடுவது, விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது போன்ற பல முக்கிய செயல்பாடுகளிலும் முழு ஈடுபாட்டுடன் இயங்கி வந்தவர். அவரின் இழப்பு என்பது கலைத்துறைக்கு மட்டுமல்ல சமுதாயத்திற்கு பேரிழப்புதான்.