தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஆர்யா இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு அவரது மனைவியும், நடிகையுமான சாயிஷா சிறப்பு பதிவு ஒன்றை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
2005 ஆம் ஆண்டு விஷ்ணு வர்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆர்யா, மாதவனுக்கு அடுத்தப்படியாக சாக்லெட்பாய் ஆக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். அறிமுகமான காலக்கட்டத்தில் உள்ளம் கேட்குமே, வட்டாரம், பட்டியல், ஓரம் போ என வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்தாலும், ஆர்யாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது பாலாவின் “நான் கடவுள்”. அகோரியாக நடிப்பில் மிரட்டியிருந்தார்.
இதுஒருபுறம் இருக்க அப்படியே மதராசப்பட்டினம் படத்தில் பார்வையாளர்களை அப்படியே தனது வசீகரமான முகத்தால் ரசிக்க வைத்திருப்பார். இயல்பாகவே ஆர்யாவுக்கு காமெடி காட்சிகளில் நன்றாக நடிக்க வரும் என்பதால், பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், சேட்டை என பல படங்களில் காமெடியில் பின்னியிருப்பார். அதேசமயம் ராஜா ராணி, இரண்டாம் உலகம்,கஜினிகாந்த், டெடி போன்ற படங்களில் காதல் காட்சிகளிலும் அசத்தியிருப்பார்.
அப்படியே வில்லனாக எனிமி படத்திலும், ஆக்ஷன் ஹீரோவாக கடம்பன், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களிலும், கேமியோ கேரக்டர்களில் எக்கச்சக்கமான படங்களிலும் நடித்திருக்கிறார். அவர் ஏன் அந்த படத்தில் கேமியோ கேரக்டரில் நடித்தார் என்பது புரியாத அளவுக்கு ஒரு நிமிட காட்சி என்றாலும் ஆர்யா அசராமல் எண்ட்ரீ கொடுப்பார். சமீபத்தில் வெளியான காஃபி வித் காதல் படத்தில் கூட பிரபல தொகுப்பாளர் டிடியின் கணவராக சில நிமிட காட்சியில் ஆர்யா தோன்றியிருந்தார்.
இப்படி அவரின் ஒவ்வொரு படமும் ரசிகர்களுக்கு புரியாத புதிராகவே உள்ள நிலையில் ஆர்யா இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வரும் நிலையில், ஆர்யாவின் மனைவியும், நடிகையுமான சாயிஷா சிறப்பு பதிவு ஒன்றை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஆர்யாவுடன் இணைந்திருக்கும் பல புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
அந்த பதிவில், என் அன்பிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! நீங்கள் எப்போதும் சிறந்த கணவர், தந்தை, மகன் மற்றும் மனிதர்! நீங்கள் எங்கள் வாழ்க்கையில் இருப்பதால் நாங்கள் மிகவும் பாக்கியசாலிகளாக உணர்கிறோம்! நீங்கள் என்னுடையதாக இருப்பதற்கு நன்றி! நான் உன்னை என்றென்றும் நேசிக்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்த பதிவு ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.
2018 ஆம் ஆண்டு கஜினிகாந்த் படத்தில் நடிக்கும் போது ஆர்யா மற்றும் சாயிஷா இடையே காதல் மலர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் காப்பான் மற்றும் டெடி படத்தில் மீண்டும் இணைந்து நடித்தனர். இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.