நடிகர் விஜயகுமாரின் இயற்பெயர் பஞ்சாட்சரம் ரங்கசாமி.1961 ஆம் ஆண்டு ஸ்ரீவல்லி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமான அவர் அதன் பின்னர், 1974 ஆம் ஆண்டு வெளிவந்த அவள் ஒரு தொடர்கதை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.


பின்னர் வரிசையாக பல படங்களில் நடித்த அவருக்கு நாட்டாமை திரைப்படம் அக்மார்க் முத்திரையை கொடுத்தது என்று சொல்லலாம். அந்தப்படத்திற்கு பின்னர் நாட்டாமை என்று சொன்னாலே முதலில் விஜயகுமாரின் ஞாயபகம்தான் வரும் தமிழ் சினிமாவை தவிர்த்து தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் அவர் நடித்துள்ளார்.


இவருக்கு முத்துக்கன்னு மற்றும் மஞ்சுளா ஆகிய இரு மனைவிகள். கவிதா மற்றும் அருண் விஜய் ஆகிய இரு பிள்ளைகளும் முதல் தாரமான முத்துக்கன்னுவிற்கு பிறந்தவர்கள். வனிதா, ப்ரீதா மற்றும் ஸ்ரீதேவி ஆகிய மூன்று பிள்ளைகள் இரண்டாம் தாரமான மஞ்சுளாவிற்கு பிறந்தவர்கள்.


மகள் வனிதாவினால் பல பிரச்சினைகள் குடும்பத்தில் உண்டாக, வனிதாவிடம் இருந்து சற்று விலகியே இருந்தார் விஜய்குமார். சமீபகாலமாக இந்த பிரச்னை அடங்கி இரு தரப்பும் அவரவர் வேலைகளை பார்த்து வருகின்றனர். 


இந்த நிலையில் விஜய்குமார்  உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் என்று நேற்று பல தகவல்கள் சூறாவளி காற்று போல் திரையுலக வட்டாரத்தை சுற்றி வந்தது. இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில், அவரின் மகன் அருண் விஜய் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.






 “எனது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும்.. அப்பா வீட்டில் ஆரோக்கியமாக இருக்கிறார். வதந்திகளை நம்ப வேண்டாம்! உங்கள் அக்கறைக்கும் அன்புக்கும் நன்றி!” என அந்த ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.