இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் திரைப்படம்தான் AV33. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணிகளை கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் படத்தின் ஒரு சண்டைக்காட்சியில் நடித்துக்கொண்டிருந்தபோது அருண் விஜக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் ”படப்பிடிப்பின் போது எனக்கு வலது கையில் அடிப்பட்டுவிட்டது. காட்சிகள் எடுத்து முடித்த பிறகு சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறேன். வலி விரைவில் குணமடையும் என நம்புகிறேன். மீதமுள்ள சண்டை காட்சிகளை ஒரு நாளுக்கு பிறகு எடுப்போம் “ என தெரிவித்துள்ளார்.கூடவே சிகிச்சை எடுத்துக்கொள்ளும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில் வலியை பொறுத்துக்கொள்ள முடியாதவராய் தலையில் கை வைத்து படுத்திருக்கிறார் அருண் விஜய்.






 


இதே போல கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அருண் விஜய்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் ” படப்பிடிப்பு தளத்தில் எனது கையில் காயம் ஏற்பட்டது. ஒரு மணி நேர இடைவெளியில் கார்டியோ செய்த பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டேன். அடுத்த 5 நாட்களுக்கு நான் பளு தூக்கும் உடற்பயிற்சிகளை செய்ய முடியாது “ என தெரிவித்திருந்தார். இந்நிலையில்தான் தற்போது காயம் குறித்த புதிய பதிவை வெளியிட்டுள்ளார் அருண் விஜய்.




அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் திரைப்படத்தில் ‘விக்டர்’ என்ற கதாபாத்திரம் மூலம் பலரை கவர்ந்தார் அருண் விஜய். 1995 ஆம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமான அருண் விஜய் அன்று முதல் தனக்கான அங்கீகாரம் கிடைக்க போராடி வருகிறார். அருண் விஜய் சிறந்த நடிகராக இருந்தாலும் கதைத்தேர்வுகளில் சொதப்புவதுதான் அவருக்கான மகுடம் கிடைக்காததற்கான காரணம். ஆனால் என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு பிறகு கதைதேர்வுகளை சற்று நிதானமாக கையாண்டு வருகிறார் அருண் விஜய். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான  குற்றம் 23, தடம், மாஃபியா,செக்க சிவந்த வானம்  உள்ளிட்ட படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்றன.  தற்போது  ஹரி இயக்கத்தில் உருவாகும் பெயர் வைக்கப்படாத  படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் விறு விறுப்பாக நடைப்பெற்று வருகிறது. ராமேஸ்வரம் , தூத்துக்குடி மாவட்டங்களின் சுற்றுவட்டார பகுதிகளில் செட் அமைத்து இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். வில்லனாக பிரகாஷ் ராஜ் நடித்து வருகிறார். இது தவிர யோகி பாபு , ’குக் வித் கோமாளி ‘ புகழ் , ராதிகா சரத்குமார், கருடா ராம் உள்ளிட்டவர்களும் நடித்து வருகின்றனர்