‘சங்கமம்’ படத்தில் இடம் பெற்ற  “மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்” பாடலில்   ‘ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா’ என்ற சிறிய பகுதியை பிரபல இசையமைப்பாளர்  எம்.எஸ்.வி பாடியிருப்பார். பாடல் முழுக்க ஹைபிச்சில் சென்று கொண்டிருக்க, நடுவே தனது கணீர் குரலால் இதமாக வருடியிருப்பார் எம்.எஸ்.வி. படத்தில் மிகப் பெரிய ஹிட் அடித்த இந்தப் பாடலுக்கு பின்னால் நடந்த சுவாரஸ்சியமான சம்பவத்தை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். 



முதலில் பாட மறுத்த எம்.எஸ்.வி


ஏ.ஆர்.ரஹ்மான் எம்.எஸ்.வியை இந்தப் பாடலுக்காக அழைத்த போது, எம்.எஸ்.வி பாடல் என்னுடைய ஸ்டைலில் இருந்தால் பராவாயில்லை, ஆனால் நீங்கள் உங்கள் ஸ்டைல் வேறயாக இருக்குமே என்று சொல்லி இருக்கிறார். உடனே ரஹ்மான் இல்லை இந்தப்பாடல் உங்கள் ஸ்டைல்தான் என்று சமாதானம் செய்திருக்கிறார். உடனே ட்யூன் கேசட்டையும், பாட்டு பேப்பரையும் கேட்டிருக்கிறார். அதுவும் எம்.எஸ்.வி வீடு வந்து சேர்ந்திருக்கிறது.


கேசட்டை போட்டு பாட்டைக்கேட்ட எம்.எஸ்.வி பாடலின் ஹம்மிங்கை மட்டும் கேட்டு விட்டு இந்தப் பாடலை பாட வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறார். இந்த முடிவை அவர் வீட்டில் சொல்ல, அவர்கள் “ முதன் முறையா தம்பி பிரியத்தோடு கூப்பிட்டு இருக்காரு போய் பாடிட்டு வாங்க” என்று கூறியிருக்கிறார்கள்.




ஆனால் எம்.எஸ்.வி சமாதானம் ஆன பாடில்லை. சரி, இவ்வளவு அன்பு வைத்து கூப்பிட்டு இருக்கார்.. போனில் சொல்லாமல் நேரில் சென்று வேறு யாரையாவது வைத்து இந்தப் பாடலை பாட வைத்து விடுங்கள் என்று பக்குவமாக சொல்லிவிட்டு வந்து விடலாம் என்று எம்.எஸ்.வி ரஹ்மானின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். ஆனால் அங்கு போன போது ரஹ்மானின் வீடு, பெரிதளவில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.




என்னப்பா தம்பி.. வீட்டில் ஏதாவது விஷேசமா என்று எம்.எஸ்.வி கேட்க, ஆமாம் எனக்கு இன்று பிறந்தநாள் என்று கூறியிருக்கிறார் ரஹ்மான். இதைக் கேட்ட எம்.எஸ்.விக்கு அதிர்ச்சியாகிவிட்டது. என்ன சொல்வது என்று தெரியாமல் எம்.எஸ்.வி நிற்க, அவரது டிரைவர் அவரது ஹார்மோனிய பெட்டியை காரில் இருந்து எடுத்து வந்திருக்கிறார். இதை பார்த்த ரஹ்மான் அந்த ஹோர்மோனிய பெட்டியை வாங்க, என்ன தம்பி நீங்க போயி... என்றிருக்கிறார் எம்.எஸ்.வி.. உடனே ரஹ்மான் “இது எனது பாக்கியம் சொல்லியிருக்கிறார்.


மனம் மாறிய எம்.எஸ்.வி


இதனால் மனம் மாறிய எம்.எஸ்.வி அந்தப் பாடலை பாடியிருக்கிறார். மாலை 4 1/2 க்கு பாடப் போனவர் 6 மணிக்கு பாடி முடித்து விட்டு வெளியே வந்திருக்கிறார். எம்.எஸ்.வி வெளியே வந்த போது, அவரை எல்லோரும் ஆச்சரியமாக பார்த்திருக்கிறார்கள்.. என்னவென்று புரியாமல்.. சென்ற எம்.எஸ்.வி பின்பு  ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டியோவிற்குள் பாட மாலை 6 மணிக்கு சென்றால் அடுத்த நாள் காலை 6 மணிக்குதான் வருவார்கள் என்ற செய்தியை தெரிந்து கொண்டாராம்.. 


புகைப்படங்கள்: Behindwoods


தகவல் உதவி:-