சென்னை (05.08.2023) ஒய்.எம்.சி.ஏ விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் கான்சர்ட்டில் மொத்தம் 30,000 ரசிகர்கள் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம், சென்னையில் நிகழ்ந்த இசை நிகழ்ச்சிகளில் அதிக பார்வையாளர்கள் பெற்ற நிகழ்ச்சியாக இது கருதப்படுகிறது
லிட்டில் மேஸ்ட்ரோ
சினிமா துறையில் என்றுமே இசை அமைப்பாளர்களுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உண்டு. இந்த வரிசையில் Little Maestro என்று அழைக்கப்படும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நேற்று (5.8.2023) சென்னை YMCA மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாடகர்கள் ஹரிஹரன் , ஆண்ட்ரியா, ராகுல் நம்பியார், பிரேம்ஜி, ரஞ்சித், திவாகர், எம் சீ சனா, மதிச்சியம் பாலா, விஷ்ணுப்ரியா, ஹரிப்ரியா, சிவாங்கி, பிரியங்கா என்று பலரும் கலந்து கொண்டு பாடல்களை பாடினர்.
30,000 ரசிகர்கள்
இந்நிகழ்ச்சியை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேரில் கண்டு களித்தனர். சென்னையில் சமீப காலங்களில் நடந்த இசை நிகழ்ச்சிகளில் அதிக ரசிகர்கள் கலந்து கொண்ட நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் ஒரு ருசிகர நிகழ்வாக மேடையில் விழா அமைப்பாளர்களான Noise and Grains நிறுவனம் மற்றும் விளம்பரதாரர்கள், யுவன் ஷங்கர் ராஜாவுக்கு ஒரு இரு சக்கர வாகனத்தை பரிசளித்தனர், அதை அவர் அவருடைய ரசிகர் ஒருவருக்கு மேடையிலேயே பரிசாக வழங்கினார்.
யுவன் ஷங்கர் ராஜா
தமிழ் சினிமா உலகில் அசைக்க முடியாத இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன்சங்கர் ராஜா. இவர் தனது 16 வயதில் இசையமைப்பாளராக திரை இசை பயணத்தை தொடங்கினார். முதல் சில படங்கள் சரியாக அமையவில்லை. அத்துடன் இவர் இசை மீது பல விமர்சனங்களும் எழுந்தது. எனினும் 2000-ஆம் ஆண்டிற்கு பிறகு தீனா, நந்தா, காதல் கொண்டேன் உள்ளிட்ட படங்களில் இவரின் இசை மிகவும் சிறப்பாக அமைந்தது. அதன்பின்பு இவருடைய இசை மீது எழுந்த விமர்சனங்கள் குறைய தொடங்கின. இவரின் பல படங்களின் பாடல்கள் மெகா ஹிட் அடித்தன.
தயாரிப்பாளர்
கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் நிலையான இடத்தைப் பிடித்து வரும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் படங்களை தயாரித்தும் வருகிறார். இவர் தயாரித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.