ஓம் சாந்தி ஓம் படத்தில் ஷாருக்கானின் கேரக்டர் எரிச்சலடையச் செய்தது என சமீபத்தில் நடைபெற்ற பேட்டியில் நடிகர் அர்ஜுன் ராம்பால் கூறிய  தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ஃபரா கான் இயக்கத்தில் 2007ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஓம் சாந்தி ஓம்'. இப்படத்தில் நடிகர் ஷாருக்கான், ஓம் பிரகாஷ் மகிஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அவர் ஒரு நட்சத்திரக் குழந்தையாகவும், சூப்பர் ஸ்டாராகவும் ஓம் கபூராக மறுபிறவி எடுக்கிறார். 15 ஆண்டுகளுக்கும் மேலாக, அந்தத் திரைப்படம் தொடர்ந்து ரசிகர்களின் நெஞ்சங்களில் தனி இடத்தை பிடித்துள்ளது.



ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நடித்த ஓம் சாந்தி ஓம் திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்றது. இப்படத்தில் அர்ஜுன் ராம்பால் வில்லன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் ஓம் சாந்தி ஓம் படத்தில் ஷாருக்கான் நடித்த ஓம் கபூர் கதாபாத்திரம் எரிச்சல் தருவதாக இருந்தது என கூறியிருந்தார். 


ஓம் சாந்தி ஓம் படத்தில் ஷாருக்கான் சினிமாவில் ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ரோலில் நடிக்கிறார். அவர் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனேவை வெறித்தனமாக காதலிக்கிறார். ஆனால் தீபிகா படுகோனே பெரிய தயாரிப்பாளரான  அர்ஜுன் ராம்பாலை ரகசியமாக திருமணம் செய்து கொள்கிறார். பின்னர் ஷாருக் மற்றும் தீபிகா இருவரையும் அர்ஜுன் கொலை செய்கிறார். படத்தின் இரண்டாம் பாதியில் ஷாருக் ஒரு பணக்கார வீட்டில் மறுபிறவியாக பிறந்து சூப்பர் ஸ்டார் ஓம் கபூராக மாறுகிறார்.



ஓம் சாந்தி ஓம் படத்தில் ஷாருக்கானின் கதாபாத்திரம் ஒரு 'நேப்போ' பேபி என்று தொகுப்பாளர் சுட்டிக்காட்டி அது பற்றி அர்ஜுனிடம் கேட்டதற்கு " ஓம் சாந்தி ஓம் படத்தில் ஷாருக்கானின் ஓம் கபூர் கதாபாத்திரம் ஒரு 'நேப்போ' கதாபாத்திரமாக எரிச்சலூட்டும் வகையில் இருந்தது. ஒரு திரைப்படக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நிச்சயம் ஒரு பெரிய நன்மை உண்டு. அவர்களும் அதே துறையில் சேர விரும்பினால் நிச்சயமாக நல்ல ஒரு தொடக்கம் கிடைக்கும். அதே சமயத்தில் மற்றவர்களை காட்டிலும் வாய்ப்புகளும் அதிகமாக கிடைக்கும். ஆனால் அதுவே அவர்களுக்கு ஒரு விதியாகவும் அமையும்” என்றார்


ஓம் சாந்தி ஓம் தவிர , அர்ஜுன் ராம்பால் ஒன் மற்றும் டான் போன்ற படங்களில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்துள்ளார் . 2006 ஆம் ஆண்டு அர்ஜுனின் ஐ சீ யூ படத்திலும் ஷாருக் கேமியோவில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.