சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் விஷால் வெங்கட். அடுத்ததாக BOMB என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அர்ஜூன் தாஸ், காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டிஎஸ்கே, பூவையார், சில்வென்ஸ்டன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். ராஜ்குமார் ஒளிப்பதிவு, படத்தொகுப்பை பிரசன்னா செய்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயராகி வரும் நிலையில் இப்படத்தின் டிரைலர் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜூன் தாஸ் படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு வியப்பை தரும். ஆக்சன் த்ரில்லர் ஜானர் படங்களிலேயே நடித்து வருவார். பாம் படத்தின் மூலம் தியேட்டரில் விசில் சத்தம் பறக்க வைக்க போகிறார். கலகலப்பான காமெடி படமாக உருவாகியுள்ளது. இப்படம் செப்டம்பர் 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், பாம் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டிரைலரின் தொடக்க காட்சியில் காளி வெங்கட் இறந்து போகிறார். இதையடுத்து காளகம்மாய்பட்டி ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து அவருக்கு இறுதி சடங்கு நடத்த ஏற்பாடு செய்கிறார்கள். அப்போது இறந்து போன காளிவெங்கட் பாம் போடுகிறார். இதை பார்த்து ஆச்சர்யப்படும் மக்கள் அவரை அன்று முதல் தெய்வமாக பார்க்க தொடங்குகிறார்கள்.
இதை சுற்றியே கதை நடக்க இருப்பது டிரைலரில் தெரிய வருகிறது. இறந்து போனவரை தெய்வமாக்கி கிராம மக்கள் செய்யும் அலப்பறையையும் மூட நம்பிக்கையையும் தோலுரித்து காட்டுவது போல் படத்தை இயக்கியுள்ளார் விஷால் வெங்கட். இறந்து போன ஒருவரை தெய்வமாக்குவதற்காக இரண்டு கிராம மக்கள் சண்டை போடுகிறார்கள். இதில் ஹீரோவான அர்ஜூன் தாஸ் என்ன செய்தார். காளி வெங்கட் ஏன் இறந்தது போல் நடிக்கிறார் என்பதை விளக்குவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது. சமீபகாலமாக ரத்தம் தெறிக்கும் ஆக்சன் படங்களை பார்த்து சலித்து போன ரசிகர்களுக்கு இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் டிரைலரை பார்க்கும் போது நகைச்சுவையால் காளகம்மாய்பட்டி மக்களின் வாழ்வியலை ரசிக்கலாம் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. வைபவ் நடித்த பெருசு படத்தை போன்று இதுவும் ஒரு ஒன்லைன் ஸ்டோரி தான் என்றாலும் ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை அளித்து வருகின்றனர்.