அட்டைப்பட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பிரபல சுயாதீன இசைக்கலைஞர் அறிவின் புகைப்படத்தை அட்டைப்படத்தில் வெளியிட்டுள்ளது ரோலிங் ஸ்டோன் பத்திரிக்கை. இந்த அறிவிப்பை, ரோலிங் ஸ்டோன் பத்திரிக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
மாஜா இசை லேபிளின் தனியிசை பாடல்களான என்ஜாய் எஞ்சாமி மற்றும் நீயே ஒளி பாடல்கள் வைரலானதை அடுத்து இந்தியாவைச் சேர்ந்த இண்டிபெண்டண்ட் இசை கலைஞர்கள் பற்றிய கட்டுரையை ரோலிங் ஸ்டோன் பத்திரிக்கை வெளியிட்டிருந்தது. அதன் அட்டைப்படத்தில் தீயும், ஷான் டி வின்செண்ட் பால் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இரு பாடல்களுக்கும் முக்கிய பங்காற்றிய அறிவு இடம்பெறாதது குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் ட்விட்டரில் மாஜாவிடமும் ரோலிங் ஸ்டோன் பத்திரிக்கையிடமும் கேள்வி எழுப்பி இருந்தார். இது பாடல் பேசும் அரசியலை அழிக்கும் செயலென்று குறிப்பிட்டுருந்தார். அறிவின் படம் இடம் பெறாததற்கு ரசிகர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதனை தொடர்ந்து, தீ, ஷான் டி வின்செண்ட், அறிவு ஆகியோரின் புகைப்படங்களை வைத்து ஃபேன் மேட் அட்டைப்படங்களும் டிசைன் செய்யப்பட்டது. அவை சமூக வலைதளத்தில் வைரலனாது.
இந்நிலையில், ரோலிங் ஸ்டோன் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், என்ஜாய் எஞசாமி, நீயே ஒளி பாடல்களை குறிப்பிடாமல், அறிவு இயற்றி பாடிய தெருக்குரல் ஆல்பத்தை குறிப்பிட்டு எழுதியுள்ளது. மேலும், எல்லைகளை கடந்து சமூக அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் அறிவின் பாடல்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது. ரோலிங் ஸ்டோன் பத்திரிக்கையின் டிஜிட்டல் பதிப்பில் இந்த அட்டைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. பல நாட்களாக தொடர்ந்து வந்த சர்ச்சைக்கு, அப்பத்திரிக்கை இப்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
முன்னதாக, ட்விட்டரில் மாஜாவையும் ரோலிங் ஸ்டோனையும் டேக் செய்து கேள்வி எழுப்பிய ரஞ்சித் அறிவு மீண்டும் ஒரு முறை இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார் இது பாடல் பேசும் அரசியலை அழிக்கும் செயலென்று புரிந்துகொள்வது அவ்வளவு கடினமா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால், இந்த சர்ச்சை குறித்து அறிவு தரப்பில் இருந்து எந்த பதிவும் வெளியிடப்படவில்லை. இணையவாசிகள் பலரும் அறிவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். எஞ்ஜாமி பாடலின் இதயமே அறிவு தான் என்றும், அவர் இல்லாமல் அந்த பாடலுக்கு உயிர் இல்லை என்றும் கருத்து பதிவிட்டிருந்தனர். இந்நிலையில் இப்போது அட்டைப்படம் வெளியானதற்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.