சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. குறிப்பாக வன்னியர் சமூகத்தினர் படத்தில் தங்கள் சமுதாயம் குறித்த தவறான தகவல் இடம்பெற்றிருப்பதாக குற்றம் சாட்டினர். இப்படத்திற்கு எதிராக பாமக கட்சி மற்றும் வன்னியர் சங்கம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனையடுத்து படத்தின் சில காட்சிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டன. இருப்பினும், சூர்யா தங்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நஷ்ட ஈடாக 5 கோடி தரவேண்டும் என்றும் பா.ம.க சார்பில் சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் சூர்யாவை எட்டி உதைப்பவர்களுக்கு 1 லட்சம் கொடுக்கப்படும் என பா.ம.க. நிர்வாகி ஒருவர் கூறினார். அதன் வேகம் குறையாமல் இருக்க ஒவ்வொரு நாளும் படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் திரைக்கலைஞர்கள், இயக்குனர்கள் கடந்த காலங்களில் கவன குறைவால், அல்லது புரிதல் இல்லாமல் செய்ததை பூதாகரமாக சமூக வலைதளங்களில் சித்தரிக்கும் போக்கு தொடங்கியுள்ளது. இவை அனைத்தும் ஊடகங்களில் பரபரப்பான செய்தியாக வெளிவந்த வண்ணம் உள்ளது.
இதற்கிடையே திரைப்படத்தின் எழுத்தாளர் கண்மணி குணசேகரன் படத்திற்காக வாங்கிய சம்பளத்தை திரும்ப கொடுத்திருந்தார். படம் வெளியாகி இருபது நாட்களுக்கு மேல் ஆகிய நிலையிலும் இந்த பிரச்சனை தணிந்தபாடில்லை. இந்நிலையில் நாடக நடிகர் அருண்குமார் சமீபத்தில், ஜெய் பீம் திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து தனது இன்ஸ்கிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், நானும் ஒரு வன்னியர்தான். ஒரு வன்னியரா என்ன இந்தப் படம் எந்த அளவுலையும் பாதிக்கல. இப்படிப்பட்ட ஒரு நிகழ்வ சூர்யா சார் பதிவு பண்ணதுக்கு என்னோட மிகப் பெரிய வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார். இந்நிலையில், நடிகர் அருண்குமார் வெளியிட்டுள்ள வீடியோவில்,நான் ஜெய் பீம் திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக, பலர் என்னை மிரட்டியதாக கூறினார்.
அவரிடம், "சொம்பு தூக்குறியா... நீ என்ன பிச்சை எடுக்குறியா... அவருக்கு சப்போர்ட் பண்ணலன்னா உன்னை அவர் படத்துல நடிக்க வைக்க மாட்டாருனு சொன்னாங்களா" என்று எல்லாம் கூறினார்கள் என்றும் அது அவர் மனதை புண்படுத்தும் வகையில் இருந்தது என்றும் கூறியிருந்தார். மேலும், பேசிய அவர், "வன்னியர் சாம்ராஜ்யம் என்பது பாரம்பரியமிக்க சாம்ராஜ்யம் அதை யாராலும் அழித்துவிட முடியாது, நான் வன்னியர் என்பதில் மிகவும் பெருமை அடைகிறேன். அதேநேரத்தில் இளைஞர்களின் மனதில் ஜாதியை திணிப்பது எனக்கு பிடிக்கவில்லை என்றார். மதம், ஜாதி அனைத்துமே மக்களை நல்வழிப்படுத்துவதற்குதானே தவிர அதை அழிவுக்கு பயன்படுத்துவது சரியானதாக இருக்காது என்றார்.