Marriage Releationship:  திருமண வாழ்க்கை தொடர்பான கதையை மையமாக கொண்டு அண்மையில் வெளியான ”இறுகப்பற்று”  திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.


சினிமா எனும் ”முன்னேற்ற கருவி”


சினிமா வெறும் பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே என்று கூறி, அதனை எப்போதும் விலக்கி வைத்து விட முடியாது. அன்று விடுதலைப் போராட்டங்களை பொதுமக்களிடையே கொண்டு சேர்த்தது முதல், இன்று சமூக விடுதலைக்கான கருத்துகளை பாமர மக்களிடையே கொண்டு சேர்ப்பது வரையிலும் சினிமா முக்கிய பங்கு வகிக்கிறது. விரிவடைந்த வியாபாராத்தால் அதிகப்படியான கமர்ஷியல் படங்கள் தற்போது வரத்தொடங்கியுள்ளன. அதேநேரம்,  அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்படும் மற்றும் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய முத்தான திரைப்படங்களும் அவ்வப்போது வந்துகொண்டு தான் உள்ளன. அப்படி அண்மையில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற படம் தான் “இறுகப்பற்று”.


சமகாலத்திற்கான அவசியமான படைப்பு:


அழகான தமிழ் வார்த்தையை தலைப்பாக கொண்ட இந்த படம், மிக வலுவான மற்றும் சமகாலத்திற்கு அவசியமான ஒரு கதைக்களத்தை மிகவும் ஜனரஞ்சகமான முறையில் கையாண்டுள்ளது. திருமண உறவு மற்றும் தம்பதியினரிடையே ஏற்படும் மனஸ்தாபங்கள் தொடர்பாக இயக்குனர் எடுத்துரைத்த விதமும், அதற்கு அவர் முன்வைத்த தீர்வுகள் என்பதும் ஏற்றுக்கொள்ளும்படியாக இருந்ததால் தான் ”இறுகப்பற்று” எனும் படைப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ”கணவன் மனைவி இடையே பிரச்னைகள் எழுவதற்கு காரணம் என எதுவும் தேவயில்லை, ஏனென்றால் கணவன் மனைவியாக இருப்பதே ஒரு காரணம் தான்” என்ற ஒற்றை வசனத்தின் மூலம் இன்று பல்வேறு குடும்பங்களில் நிலவும் மனக்கசப்புகளுக்கான மூலதாரத்தை தெளிவுபடுத்தியுள்ளார் இயக்குனர் யுவராஜ் தயாளன்.


இயக்குனர் சொன்ன தீர்வுகள்:


காதல் திருமணம் முதற்கொண்டு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என, அனைத்து வகையிலான இல்லற வாழ்விலும் பிரச்னைகள் எழத்தான் செய்கின்றன. அவை அனைத்திற்கும் பிரிந்து வாழ்வது, விவாகரத்து பெறுவது எல்லாம் தீர்வாகிவிடுமா? பிரச்னைகளை வெளிப்படையாக பேசுங்கள், தம்பதி இடையே தாழ்வு மனப்பான்மைகளை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள், உணர்வுகளை வெளிப்படுத்துங்கள் என்ற எளிமையான 3 தீர்வுகளை தான் ”இறுகப்பற்று” படத்தின் இயக்குனர் முன்வைத்துள்ளார்.


பிரச்னையின் தொடக்கப் புள்ளி:


திருமண வாழ்வில் சண்டைகளே இல்லாவிட்டாலும் சளிப்பு ஏற்பட்டு விடும் என்பது போன்ற காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன. கள எதார்த்ததும் அதுவே. சுமார் 25 வருடங்கள் வெவ்வேறு வாழ்க்கையை வாழ்ந்த இருவர், மீதமுள்ள வாழ்க்கை முழுவதும் ஒன்றாக சேர்ந்து வாழலாம் என முடிவெடுத்து தான் திருமணம் செய்கின்றனர். அப்படி நிகழும்போது இருவரின் விருப்பங்களும், தேர்வுகளும் மற்றும் வாழ்க்கை முறையும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற எந்தவித கட்டுப்பாடும் இல்லை. ஆனால், அப்படி இருக்க வேண்டும் என்ற எண்ணங்களால் தான் பெரும்பாலான தம்பதி இடையே பிரச்னைகளே தொடங்குகின்றன. 


விட்டுக் கொடுப்பது நல்லதா?


வெவ்வேறு வாழ்வியலை கொண்ட இருவர் ஒரு விஷயம் குறித்து யோசிக்கும்போது வேறுபட்ட கருத்துகள் ஏற்படவே வாய்ப்புகள் அதிகம். அதுபோன்ற நேரங்களில் தனது எண்ணங்களை வெளிப்படையாக கூறிவிட்டாலே நல்லது. மாறாக நமக்கு பிடித்தவர்களுக்காக விட்டுக்கொடுக்கலாம், எதிர்த்து பேசினால் சண்டை வந்துவிடுமோ என தயங்கி மற்றொருவரின் முடிவை ஏற்றுக்கொண்டால் அதுவே தொடர்கதையாகி விடும். இதனால் ஒரு கட்டத்தில் பெரும் சளிப்பு ஏற்பட்டு பிரச்னையாக வெடித்து திருமண வாழ்வே கூட சிக்கலாகலாம். நமக்கு பிடித்ததை போன்ற வாழ முடியாமல், மற்றவர்களுக்கு பிடித்ததையும் செய்ய முடியாமல் வாழ்க்கையே கூட வெறுத்துப் போகலாம். அப்படிபட்ட ஒரு திரைக்கதையை தான் “இறுகப்பற்று” படமும் விவாதித்து உள்ளது.


சண்டைகள் நல்லதே..!


மேற்குறிப்பிட்ட மோசமான அனுபவத்தை பெறுவதற்கு பதிலாக ஒரு விஷயம் பற்றி விவாதிக்கும் போதே, தனது கருத்தை தெளிவாக முன்வைத்து விடலாம். இதனால் சண்டை வருகிறது என்றால் தாராளமாக வரட்டும். புதியதாக வாங்கும் செருப்பே ஆரம்பத்தில் கடிக்க தான் செய்கிறது. அப்படி இருக்கையில் உணர்ச்சிகளை கொண்ட ஆறறிவு வாய்ந்த சுமார் 25 வருடங்கள் வெவ்வேறு வாழ்க்கையை வாழ்ந்த இரண்டு பேர், வாழ்வில்  ஒன்றாக சேர்ந்து பயணிக்க முற்படும்போதும் பல கருத்து வேறுபாடுகள் எழத்தான் செய்யும். எனவே தம்பதி இடையே வாக்குவாதங்கள், சண்டைகள் எழுந்தால் தாராளமாக எதிர்கொள்ளுங்கள். ஏனென்றால், இந்த சண்டைகளில் தான் தனது கணவன் அல்லது மனைவி உண்மையில் என்ன மாதிரியான வாழ்வை எதிர்பார்க்கிறார், அவருடைய எண்ணங்கள் எப்படி இருக்கிறது என்பதையே உணர முடியும். அதன் மூலம் கிடைக்கும் புரிதல் தான், பல தசாப்தங்களுக்கான ஒரு அழகான மற்றும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை முன்னெடுத்து செல்ல முடியும்.


பேசினாலே போதுமே..!


திருமண வாழ்வில் வரும் பெரும்பாலான பிரச்னைகள் சரியான புரிதல் இல்லாத காரணத்தினாலேயே எழுகின்றன. இந்த பிரச்னைகளை தீர்க்க மூன்றாவது நபரின் உதவியை அணுகாமல், தம்பதியினர் மனம் திறந்து பேசினாலே நல்ல முடிவை எட்டிவிடலாம். ஆனால், இதை செய்யாததன் விளைவாக தான் மிக அற்பமான காரணங்களுக்காகவெல்லாம் விவாகரத்து கேட்டு, பல இளம் தம்பதியினர் இன்று நீதிமன்ற வாசலில் காத்துக் கிடக்கின்றனர். அப்படி விவாகரத்து பெற்றவர்களின் பலரின்  முடிவு மறுமணமாக தான் உள்ளது. அந்த சூழலின் போது,  முதல் முயற்சியில் ஒரு தவறான நபரை தேர்ந்து எடுத்துவிட்டோம், இந்த முறை அப்படி செய்து விடக்கூடாது என்பது தான் அவர்களின் எண்ணமாக உள்ளது. ஆனால், உண்மையில் தனக்கான நபரை தேர்வு செய்வதில் பெரும்பாலானோர் இங்கு தவறு செய்வதில்லை, தங்களுக்கு இடையேயான பிரச்னையை கையாள்வதில் தான் தவறு செய்கின்றனர். இதை உணர்ந்தாலே பல விவாகரத்துகள் இங்கு அநாவசியமானதாகி விடும்.


தனிமையில் இனிமை சாத்தியமா?


முதல் திருமணத்தில் கிடைத்த மோசமான அனுபவத்தால் விவாகரத்திற்கு பிறகு பலர் மறுமணமே வேண்டாமென முடிவெடுப்பது உண்டு. ஆனால், சமூகத்தை சுற்றி பாருங்கள். உள்ளூர் தொடங்கி மேற்கத்திய நாடுகள் வரை வயது வித்தியாசமின்றி, அனைத்து தரப்பினரும் தனக்கான துணையை தேடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். காரணம் நம்மால் ஓட முடிந்தவரையிலும், நடக்க முடியும் வரையிலும் நமக்கு யாருடைய உதவியும், அக்கறையும் தேவைப்படாது. ஆனால், ஒரு கட்டத்தில் இந்த தனிமை என்பது நம்மையே வேட்டையாட தொடங்கிவிடும். இதனால் தான் தள்ளாடும் வயதிலும் இன்று பலர் திருமணம் செய்து வருகின்றனர். திருமண வாழ்வின் ஆரம்ப காலங்களில் ஏற்படும் சின்ன சின்ன பிரச்னைகளை சரியாக கையாண்டு, நரைமூப்பு காலங்களில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்காத இணையாக, துணையாக இருப்பதே திருமண வாழ்வின் அழகியல் ஆகும். ( அதற்காக தனிமையில் இருப்பவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக இருப்பதில்லை என கூறவில்லை. ஆனால், அவர்கள் விதிவிலக்கே. அதேநேரம் திருமணம் ஆகிவிட்டது என்ற ஒற்றை காரணத்திற்காக, தன்னைப்பற்றி கிஞ்சித்தும் யோசிக்காத,புரிந்துகொள்ள முயற்சிக்காத ஒருவருடன் காலம் முழுவதும் வாழ வேண்டும் என்ற அவசியமும் இல்லை என்பதே நிதர்சனம்)