கோலிவுட்டில் காமெடி கதை சொல்வதில் மாஸ்டராக விளங்கும் இயக்குநர்களில் ஒருவரான சுந்தர்.சியின் பிரபல திரைப்பட சீரிஸ் ‘அரண்மனை’. காமெடி கலந்த பேய் பட சீரிஸான இப்படத்தின் முதல் பாகம் வரவேற்பையும், 2,3 பாகங்கள் கலவையான விமர்சனங்களையும் பெற்றன.
அரண்மனை 4
இந்நிலையில், இந்தப் படத்தின் 4ஆம் பாகத்துகான பணிகள் இந்த ஆண்டு தொடக்கம் முதலே நடைபெற்று வந்தன. முந்தைய பாகத்தில் நடித்த ராஷி கண்ணாவுடன் தமன்னா, சந்தோஷ் பிரதாப் ஆகியோர் இந்த பாகத்தில் இணைந்துள்ளனர். சுந்தர். சி முந்தைய பாகங்களைப் போல் இப்படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அரண்மனை 4 திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக வெளியாக உள்ளதாக படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படாத நிலையில், பொங்கல் வெளியீடாக படம் வரும் என்று மட்டும் படக்குழு அறிவித்துள்ளது.
நடிகை குஷ்பு, தமன்னா, யோகி பாபு உள்ளிட்ட படக்குழுவினர் இதனை தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.
பேய் பட ட்ரெண்டில் இணைந்த சுந்தர்.சி
2014ஆம் ஆண்டு கோலிவுட் சினிமாவில் ஹாரர் படங்கள் ட்ரெண்டில் உச்சம்பெற்ற காலக்கட்டத்தில் சுந்தர். சியும் இந்த ட்ரெண்டில் ஐக்கியமாக அரண்மனை 1 திரைப்படத்தினை எடுத்தார். ஆண்ட்ரியா, ஹன்சிகா, ராய் லக்ஷ்மி, வினய், சந்தானம்,மனோபாலா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
மேலும் அந்த ஆண்டு கோலிவுட்டில் வெளியான படங்களில் அதிக வசூலைக் குவித்த படங்களில் ஒன்றாக இப்படம் உருவெடுத்தது. தொடர்ந்து இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களை எடுக்க முடிவெடுத்த சுந்தர்.சி 2016ஆம் ஆண்டு அரண்மனை 2 படத்தையும், 2032ஆம் ஆண்டு அரண்மனை 3 படத்தையும் எடுத்தார்.
த்ரிஷா, சித்தார்த், ஹன்சிகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் இரண்டாம் பாகத்திலும், ராஷி கண்ணா, ஆர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் மூன்றாம் பாகத்திலும் நடித்த போதிலும் இந்தப் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் அரண்மனை 4 பற்றிய அறிவிப்பு வெளியானது. தற்போது இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது சுந்தர். சி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
முந்தைய பாகங்களைப் போல் இல்லாமல் இந்தப் படம் வெற்றிபெறுமா என எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் காத்துள்ளனர்.