Aranmanai 4 Boxoffice Collection: அரண்மனை 4 திரைப்படத்தின் வசூல், 5 நாள்களில் பட்ஜெட்டை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு வசூலை எட்டி இந்த ஆண்டு கோடை விடுமுறை ப்ளாக்பஸ்டர் படமாக உருவெடுத்துள்ளது.


சுந்தர்.சி - தமன்னா காம்போ


சுந்தர்.சி இயக்கி நடிக்க, தமன்னா, ராஷி கண்ணா, சந்தோஷ் பிரதாப், யோகி பாபு, மறைந்த லொள்ளு சபா சேஷூ, கோவை சரளா உள்ளிட்டோர் நடிப்பில் சென்ற மே 3ஆம் தேதி வெளியான திரைப்படம் அரண்மனை 4. கடந்த 2014 முதன்முதலாக அரண்மனை 1 திரைப்படம் வெளியானது, அதனைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் வரிசையாக வரத் தொடங்கிய இந்த பேய் சீரிஸின் 4ஆவது பாகமாக அரண்மனை 4 திரைப்படம் வெளியாகியுள்ளது.


ஹாரர் காமெடி


ஹாரர் காமெடி ஜானரில் வரிசையாக வெளியாகி வரும் இப்படத்தின் முந்தைய பாகங்களில் ஹன்சிகா, த்ரிஷா, ஆண்ட்ரியா ஆகியோர் பேயாக நடித்த நிலையில், இந்தப் பாகத்தில் நடிகை தமன்னா பேயாக நடித்துள்ளார். சுந்தர்.சியின் மனைவியும் நடிகையுமான குஷ்பு மற்றும் ஏ.சி.எஸ் அருண்குமார் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ள நிலையில், ஹிப் ஹாப் ஆதி அரண்மனை 4 படத்துக்கு இசையமைத்துள்ளார். 


உலகம் முழுவதும் ரூ.50 கோடி வசூல்


முதல் பாகத்தை அடுத்து வந்த கடந்த இரண்டு பாகங்கள் சுமாரான வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த பாகம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. குறிப்பாக தாயாக நடித்துள்ள தமன்னாவின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்று வரும் நிலையில், குடும்ப ஆடியன்ஸ்களை கோடை விடுமுறையில் கவர்ந்து வசூலிலும் அரண்மனை 4 திரைப்படம் மாஸ் காண்பித்து வருகிறது.


பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளைப் பகிரும் Sacnilk தளம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, அரண்மனை 4 திரைப்படம் இந்தியா முழுவதும் முதல் நாள் - ரூ.4.65 கோடிகளையும், இரண்டாம் நாள் - ரூ.6.65 கோடிகளையும், மூன்றாம் நாள் - ரூ. 7.85 கோடிகளையும், நான்காம் நாள் - ரூ.3.65 கோடிகளையும், ஐந்தாம் நாள் - 3.4 கோடிகளையும் வசூலித்துள்ளது. 5 நாள்களில் இதுவரை இந்தியா முழுவதும் மொத்தம் 26.2 கோடிகளை அரண்மனை 4 திரைப்படம் வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் தெரிவித்துள்ளது. 




மாஸ் ஹீரோக்களை மிஞ்சிய வசூல்


மேலும், உலகம் முழுவதும் அரண்மனை 4 திரைப்படம் 5 நாள்களில் ரூ.50 கோடிகள் வசூலைக் கடந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அரண்மனை 4 திரைப்படம் 27.25 கோடிகள் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


 






2024ஆம் ஆண்டு தொடங்கியது முதல் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான மாஸ் ஹீரோக்களின் படங்களான ரஜினிகாந்தின் லால் சலாம், தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் ஆகியவை பாக்ஸ் ஆஃபிஸில் ஏமாற்றத்தையே ஏற்படுத்தின. இந்நிலையில், சுந்தர், சியின் அரண்மனை 5 நாள்களில் உலகம் முழுவதும் ரூ.50 கோடிகளை வசூலித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கோலிவுட் வட்டாரத்தை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.