Aranmanai 4 : அரண்மனை படத்தில் தமன்னா மிகவும் சிறப்பாக நடித்துள்ளதாக இயக்குநர் சுந்தர் சி தெரிவித்துள்ளார்


படத்தின் கதை இதுதான்..


அரண்மனை படத்தில் கதை பற்றி ஒரு சிறிய க்ளிம்ப்ஸ் கொடுத்துள்ளார் சுந்தர் சி “பண்டைய காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த அரசர்கள் ஆஃப்கானிஸ்தான் வரை ராஜ்ஜியம் செய்திருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் கிழக்கு பக்கம் பிரம்மபுத்ரா நதியைக் கடந்து யாரும் சென்றதில்லை. இந்த பகுதிகளில் பேய் கதைகள் (Ghost Stories) அதிகம் புழக்கத்தில் இருக்கின்றன. அப்படியான ஒரு பின்னணியில் இந்தப் படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறோம்” என்று சுந்தர் சி கூறியுள்ளார்


எப்படி எடுத்தாலும் குறை சொல்வார்கள்..


அரண்மனை 4-வது பாகம் குறித்து பேசிய சுந்தர் சி “இந்த படத்திற்காக நாங்கள் சளைக்காமல் உழைத்திருக்கோம். ஒரு படத்தில் ஏற்கனவே மூன்று பாகங்கள் வந்துவிட்டபின், அதன் அடுத்த பாகத்தை எப்படி எடுத்தாலும் முந்தின படம் மாதிரி இல்லை என்று ரசிகர்கள் குறை சொல்லத்தான் போகிறார்கள்.


அரண்மனை படத்திற்கு என்று ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள். குழந்தைகள் மற்றும் பெண்கள்தான் இந்தப் படத்தின் முக்கிய ரசிகர்கள்.


எங்கு சென்றாலும் அரண்மனை படத்தின் அடுத்த பாகம் எப்போது வரும் என்றுதான் கேட்கிறார்கள். இதற்கு முன்பு வெளியான படங்களின் வரிசையிலும் இருக்க வேண்டும் அதே நேரத்தில் அதைவிட சிறப்பாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு ஏற்றபடி இரு ஒன்லைன் எனக்கு கிடைத்தது. இப்போதெல்லாம் ஒரு படம் காலை வெளியானால் மாலை அதற்கு வெற்றிவிழா கொண்டாடுகிறார்கள். அரண்மனை 3-ஆம்  பாகத்துடன் சேர்த்து இரண்டு படங்கள் வெளியாகி வெற்றிவிழா கொண்டாடின. அந்த இரண்டு படங்களை விட அரண்மனை 3 நல்ல வசூல் எடுத்தது. என்னுடைய படங்களுக்கு நான் வெற்றிவிழா கொண்டாடியது இல்லை. அரண்மனை 4 அனைவரையும் கவரும் வகையில் வந்திருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்


படத்தின் நடிகர்கள் குறித்து..


இந்தப் படத்தின் நடிகர்கள் பற்றி அவர் கூறுகையில் ”அரண்மனை படத்தில் நடிகைகளே முக்கிய கேரக்டர்கள். முந்தைய படத்தில் ஹன்சிகா, த்ரிஷா எல்லாம் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தில் தமன்னாவும் ராஷி கண்ணாவும் நடித்திருக்கிறார்கள். தமன்னாவை நீங்கள் யாரும் இப்படி பார்த்திருக்கமாட்டீர்கள். அவ்வளவு சிறப்பாக நடித்திருக்கிறார். யோகிபாபு , வி டிவி கணேஷ் , கோவை சரளா , சிங்கம் புலி என ஏராளமான நடிகர்கள் இதில் நடித்திருக்கிறார்கள். முக்கியமாக வி.டிவி கணேஷ் இந்தப் படத்திற்காக கெட்-அப் மாற்ற வைத்திருக்கிறோம்.


இந்தப் படத்திற்காக அவரை மீசை எடுக்க சொன்னோம். மீசையை எடுத்தால் மற்ற படங்களில் கண்டினியுவிட்டி மாறும் என்று சொன்னார். மீசையை எடுத்தால் ஜெமினி கனேசன் மாதிரி இருப்பீங்கனு சொன்னேன்.


மீசையை எடுத்துவிட்டு வந்துவிட்டு ஜெமினி கணேசன் மாதிரி இருக்கேன் என்று அவரே என்னிடம் வந்து சொன்னார். மனசுக்குள் ஜெமினி கணேசனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்” என்றார்