அரணம்


விஜய் ஆண்டனி இசையமைத்த உசுமலாரசே, மாக்காயலா, மஸ்காரா போட்டு, வேலாயுதம் படத்தில் வேலா வேலா என பல்வேறு புகழ்பெற்ற பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் பிரியன். மேலும் கலகத் தலைவன் , சினம், கடாரம் கொண்டான், பிச்சைக்காரன் , கோலி சோடா உள்ளிட்டப் படங்களுக்கு இவர் எழுதிய பாடல்கள் பெரிய அளவில் மக்களை சென்று சேர்ந்துள்ளன.


தற்போது இயக்குநராக அவர் அறிமுகமாக இருக்கும் படம் அரணம். பிரியன், லகுபரன், வர்ஷா, கீர்த்தனா உள்ளிட்டவர்கள் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் அரணம். ஹாரர் திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை தமிழ் திரைக்கூடம் தயாரித்துள்ளது. ஷாஜன் மாதவ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.  நேற்று மாலை பிரசாத் லேப் இல்   அரணம் படத்தின் இசை மற்றும்  ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது  பேசிய பிரியன் தமிழ் சினிமாவின் போக்கில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.


30 நொடிக்கு 2 லட்சம்






தமிழ் சினிமாவின் தற்போதைய நிலவரத்தை கடுமையாக சாடிய பிரியன் முன்னணி இயக்குநர்களின் படங்கள் மற்றும் சூப்பர்ஸ்டார் என எதையுமே விட்டுவைக்கவில்லை.  மேலும் தமிழ் ரசிகர்களுக்கு தேவையற்ற டங்கி, அக்வாமேன் போன்ற படங்களை இங்கு வெளியிடுவதற்கு பதிலாக,  நல்ல கதைகளை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


ஒரு காலத்தில் படைப்பாளிகள் கையில் இருந்த சினிமா இப்போது கார்ப்பரேட் காரர்கள் கையில் சென்றுவிட்டது. சினிமா மீண்டும் படைப்பாளிகள் கையில் வரவேண்டும் என்பதே என் ஆசை என்றும்  மலையாள சினிமாவை பார்த்து பாராட்டிவரும் நாம் இங்கு இருக்கும் ஆயிரக்கணக்கான கதைகளை கண்டுகொள்வதில்லை என்று அவர் தெரிவித்தார். சினிமாவைப் பொறுத்தவரை திரும்பினால் கூட காசு கேட்கிறார்கள் என்று கூறிய பிரியன் தன் படத்தில் நடிக்க அமலா ஷாஜி கேட்ட தொகையைப் பெற்றி தெரிவித்தார்.


அரணம் படத்தில் நடிப்பதற்காக இன்ஸ்டாகிராம் பிரபலம் அமலா ஷாஜி 30  நொடிக்கு 2 லட்சம் ரூபாய் கேட்டதாகவும் அதை கேட்டதும் தனக்கு தலை சுற்றல் ஏற்பட்டுவிட்டதாகவும் இயக்குநர் பிரியன் தெரிவித்தார். மேலும் அவர் போக்குவரத்திற்காக ஃபிளைட் டிக்கெட் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கேட்டதாகவும் அவர் கூறினார்.