Aranam: நடிகர் விஷால் பேசியது முட்டாள்தனம், அவரது பேச்சை தூக்கி குப்பையில் போடுங்கள் என அரணம் படத்தின் வெற்றி விழாவில் பாடலாசிரியர் பிரியன் பேசியுள்ளார். 


பிரபல பாடலாசிரியர் எழுதி ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் அரணம். ஒரு மாறுபட்ட ஹாரர் திரில்லராக உருவாகி இருந்த  இந்த படம் மக்களின் வரவேற்பை பெற்று, 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது. இதனால் அரணம் படத்தின் 25-வது நாள் கொண்டாட்டத்தை படக்குழுவினர் கொண்டாடினர். நிகழ்ச்சியில் பேசிய பாடலாசிரியர் பிரியன், ”எத்துனை துயர் வரினும் அறம் வெல்லும். இவ்விழாவிற்குப் பல திரை நண்பர்களை அழைத்தேன் ஆனால் யாரும் வரவில்லை பரவாயில்லை.  அரணம் இசை வெளியீட்டு மேடையில் சொன்னதுபோல் அரணம்  வென்றுள்ளது. 2024-ஆம் ஆண்டின் முதல் 25 நாள் கொண்டாட்ட படம் அரணம். இதை எவராலும் மாற்ற முடியாது. பொங்கலுக்கு வந்த பெரிய படங்கள் அடுத்த வாரம் கொண்டாடும் போது இது காணாமல் போய் விடக்கூடாது. இந்தப்படம் ஒரு சின்னப்படத்தை தயாரிக்கும் தைரியத்தைத் தரும்.


அரணம் படத்தின் பின்னால் பல பிரச்சனைகள் இருக்கிறது என்று முன்பே மேடையில்  பேசினேன். அப்போது இரண்டு விதமான அழைப்புகள் வந்தது. அன்பான மிரட்டல் அழைப்புகள், இப்போதுதான் வளர்ந்து வருகிறீர்கள் என்று பலர் எச்சரித்தார்கள். இன்னொருபுறம் பலர் திரையுலகிலிருந்து பலர் கூப்பிட்டுப் பாராட்டினார்கள். எங்கள் வலிகளைப் பேசியுள்ளீர்கள் என்று என்னை ஊக்கப்படுத்தினார்கள். நான் அன்று பேசியது மிகப்பெரிய பேசு பொருளானது. ஆயிரம் குண்டுகள் ரத்தம் தான் சினிமா என்றாகிவிட்டது இதை நான் பேசிய பிறகு எல்லா இடங்களிலும் பேசு பொருளாக மாறியிருப்பது மகிழ்ச்சி.


இப்போது படம் செய்ய ஹீரோ கால்ஷீட் இருந்தால் போதும் என்றாகிவிட்டது. அரணம் வெளியான இந்த 25 நாளில் நிறைய கற்றுக்கொண்டேன், ஒரு படத்தை எடுத்துவிட்டு சும்மா நின்றிருந்தால் அவ்வளவு தான் நீங்கள் காலி, நான் தெருத்தெருவாக சென்றேன். ஒவ்வொரு நகரத்துக்கும்  சென்றேன் ஒவ்வொரு திரையரங்காகச் சென்றேன் அப்போது தான் நமக்கானது நடக்கும். என் சொந்த நகரத்தில் காலைக்காட்சி 96 டிக்கெட் விற்றது இது வெற்றி இல்லை என்றால் என்ன? ஆனால் அடுத்த வாரம் உங்கள் படத்தை எடுத்து விடுவோம் என்றார்கள் ஏனென்று கேட்டால் புதுப்படம் வந்து விடும் என்கிறார்கள் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் படத்தை எடுத்துவிட்டு டிக்கெட் புக்காகாத படத்தை கொண்டு வந்தால் எப்படி சினிமா அழியாமல் இருக்கும். சினிமாவை அழிப்பது சினிமாக்கரான்தான்.


4 கோடி இருந்தால் சினிமாவுக்கு வராதீர்கள் என்று விஷால் சொன்னார், எனக்கு அட்வான்ஸ் தந்த தயாரிப்பாளர்கள் 2 பேர் ஆபிஸை மூடிவிட்டுப்போய்விட்டார்கள். என்ன பைத்தியக்காரத்தனம் இது.


சின்னப்படம் எத்தனை ஜெயித்துக்கொண்டு  இருக்கிறது,  அரணம் படமே அதற்கு சாட்சி. எப்படி இப்படி முட்டாள்தனமாக விஷால் பேசலாம். அவர் பேச்சைக் கேட்டு பலர் ஒதுங்கி விட்டார்கள். அதில் எத்தனை நல்ல படங்கள் இருக்கும். சின்னப் படங்களை ஜெயிக்கவிடாமல் செய்வது சினிமாக்கார்கள் தான். உங்களால் கடைசி வரை தெம்பாக ரோட்டில் இறங்கி நிற்க முடியுமென்றால், சினிமாவுக்கு வாருங்கள், சின்ன பட்ஜெட் படம் எடுத்து ஜெயிக்க முடியும். இதோ அரணம் படத்தை ஜெயிக்க வைத்துவிட்டு உங்கள் முன்னால் நிற்கிறோம். விஷால் சொன்னதைக் குப்பையில் தூக்கிப்போட்டுவிட்டு சினிமாவுக்கு வாருங்கள்” என பேசியுள்ளார். 


பாடலாசியர் பிரியன் இயக்கி, நாயகனாக நடித்துள்ள அரணம் படத்தில் ஹீரோயினாக வர்ஷா நடித்துள்ளார். படத்திற்கு சாஜன் மாதவ் இசை அமைத்துள்ளார்.