ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்களுக்கு தான் இசையமைத்த நாட்களை நினைவு கூர்ந்துள்ளார். அந்த நாட்களை திரும்பிப் பார்க்கையில், அது ஆசுவாசமாக இனிமையான அனுபவமாக இருந்திடவில்லை என்பதை விவரித்தார். ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், ரஹ்மான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் பணிபுரிவது 'நரகம்' என்று கூறினார், ஏனெனில் அவருக்கு மிகவும் குறைவான நாட்கள் மட்டுமே வழங்கப்படுமாம், அதற்குள் இசையமைக்க சொல்லி திரைப்பட தயாரிப்பாளர்களின் பெரும் அழுத்தம் காரணமாக அந்த நாட்கள் நரகம் போல இருந்ததாக குறிப்பிட்டார். பல விருதுகளை வென்ற பாடகர் மற்றும் இசையமைப்பாளர் தரமான பாடல்களை உருவாக்குவதில் அழுத்தமும் சிக்கல்களும் உருவாக்குகிறது என்று கூறியுள்ளார். தற்போது நிலைமைகள் மேம்பட்டு, நாளுக்கு நாள் சிறப்பாக மாறிக்கொண்டிருப்பதை நேர்மறையாக எடுத்துக்கொள்ளும் ஏ ஆர் ரஹ்மான், கடந்த நாட்களில் மிகுந்த அழுத்தத்தில் படங்களுக்கு இசையமைத்ததை நினைவு கூர்ந்தார்.



அவர் பேசுகையில் “முன்பு, நாங்கள் ரஜினிகாந்தின் படங்களை மார்ச் மாதத்தில் தொடங்கினால்,  இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று சொல்வார்கள். பின்னர், நான் பாடல்களை செய்ய வேண்டும், அதன் பிறகு பின்னணி செய்ய வேண்டும், அந்த சமயத்தில் பவர் கட் வேறு நான் வசித்த இடத்தில் அதிகமாக இருந்தது. நாங்கள் இரண்டு ஜெனரேட்டர்களை வாங்கி நிறுத்தி வைத்திருந்தோம். அந்த காலங்கள் நரகம்,” என்றார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகையில், அவர் ஒரே நேரத்தில் வெவ்வேறு இயக்குனர்களின் பல படங்களில் பணியாற்றினார். ஆனால், மற்ற படங்களை விட ரஜினிகாந்த் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியதாயிற்று. சில நேரங்களில், இது இயக்குனர்கள் ரஹ்மான் மீது எரிச்சலையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது. முத்து, சிவாஜி, எந்திரன் மற்றும் 2.0 உட்பட பல ரஜினிகாந்த் படங்களுக்கு இசையமைப்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



அதே நேர்காணலில் ரஹ்மான் பேசுகையில், பண்டிகை காலங்களில் தங்கள் திரைப்படங்கள் திரையரங்குகளில் திரைக்கு வருகின்றன என்று இயக்குனர்கள் தன்னிடம் கூறுவார்கள். இதன் காரணமாகவே, ஏ ஆர் ரஹ்மான் எல்லா பண்டிகைகளையும் வெறுக்கத் தொடங்கியதாக கூறினார், ஏனெனில் அவர்கள் அவருக்கு டெட்லைன் கொடுப்பது "நரகம்" போல இருக்குமாம், மேலும் அவர் எந்த பண்டிகையையும் அனுபவிக்கும் வாய்ப்பையும் பெறவில்லை. "இப்போது, ​​​​அதிக ஓய்வு இருக்கிறது," என்று அவர் மேலும் கூறி பெருமூச்சு விட்டார். ஏ.ஆர்.ரஹ்மான், பிரபல பாடலாசிரியர்-கவிஞர் குல்சாருடன் தொழில் அதிபர் சுப்ரதா ராயின் வாழ்க்கை வரலாற்றுப் படத்திற்காக மீண்டும் இணைகிறார். முன்னதாக, அவர்கள் தில் சே, குரு மற்றும் ஸ்லம்டாக் மில்லியனர் போன்ற மறக்கமுடியாத படங்களில் இணைந்து வேலை செய்தனர், இது அகாடமி விருதுகள் உட்பட பல பாராட்டுகளைப் பெற்றது. ரஹ்மான் தனது இசைக்காக தேசிய திரைப்பட விருதுகள், அகாடமி விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.