சென்னையில் நடந்த இசை நிகழ்ச்சி குளறுபடி காரணமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேதனையுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யா ராம் பேலஸ் சிட்டியில் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக இந்த இசை நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் அன்றைய தினம் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக கனமழை பெய்ததால் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆர்வமுடன் வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிலையில் தான் அதற்கு மாற்றாக தான் நேற்று ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடந்தது.
இம்முறை மழை பெய்தால் அணிந்து கொள்ள ஒருமுறை பயன்படுத்தும் ரெயின்கோட் உள்ளிட்ட பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ACTC events நிறுவனம் செய்திருந்தது. ஆனால் வாகனம் பார்க்கிங் செய்யுமிடம் தொடங்கி அனைத்து இடங்களிலும் ரசிகர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டதால் இசை நிகழ்ச்சி நடந்த இடம் கலவர பூமியானது.
சமூக வலைத்தளங்களில் பலரும் கொந்தளிக்க தொடங்கினர். #ARRahmanConcert, #ARRConcert, #MarakkumaNenjam என்ற ஹேஸ்டேக்கில் எல்லாம் தங்கள் குமுறல்களை கொட்டி தீர்த்தனர். இதனைத் தொடர்ந்து நடந்த குளறுபடிகளுக்கு மன்னிப்பு கேட்பதாக ACTC events நிறுவனம் அறிவித்தது. தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “டிக்கெட் வாங்கியவர்கள் மற்றும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளால் நுழைய முடியாமல் போனவர்கள், தயவுசெய்து உங்கள் டிக்கெட் வாங்கியதன் நகலை உங்கள் குறைகளுடன் arr4chennai@btos.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பகிரவும். எங்கள் குழு விரைவில் பதிலளிக்கும்” என தெரிவித்திருந்தார்.
இது ரசிகர்களிடையே மேலும் அதிருப்தியை உருவாக்கியது. நடந்த நிகழ்வுகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என விமர்சனம் செய்தனர். இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேதனையுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சிலர் என்னை எல்லா நேரத்திலும் சிறந்தவர் என்று அழைக்கிறார்கள். இந்த நேரத்தில் அனைவரும் விழித்துக்கொள்ள நான் பலி ஆடு ஆகிறேன். சென்னையில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மலர வேண்டும். சுற்றுலாத்துறை மேம்பாடு, திறமையான மக்களின் கூட்டம் மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் திறன், பார்வையாளர்களை விதிகளைப் பின்பற்ற அறிவுறுத்துதல் மற்றும் குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குதல் போன்றவை செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.