AR Rahman concert: ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சியை நடத்திய ஏசிடிசி நிறுவனம் தாங்கள் சொன்னதை விட அதிகமாக 45,000 டிக்கெட்டுகளை விற்றதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக கூறி இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மறக்குமா நெஞ்சம்:
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசை வாழ்க்கையை சிறப்பிக்கும் விதமாக மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 10ம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நேரில் பார்க்க ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளனர். ஆனால், அவர்களை சரியாக கையாள நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் தவறிவிட்டனர். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பெரும்பலான ரசிகர்கள் குவிந்ததால் குளறுபடி ஏற்பட்டது. சில்வர், கோல்டு, பிளாட்டினம் என டிக்கெட்டுகள் முன்பதிவு செய்தவர்கள் நுழைவு வாயிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதனால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது. இசை நிகழ்ச்சியை பார்க்க முயன்றவர்களில் சிலருக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. நிகழ்ச்சியில் நடந்த அசம்பாவிதங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவியதுடன் சிலர் ஏ.ஆர். ரஹ்மானை விமர்சித்தனர். நிகழ்ச்சியை சரியாக நடத்த ஏற்பாடு செய்யவில்லை என குற்றம்சாட்டப்பட்டது.
3 பேர் மீது வழக்குப்பதிவு:
இதற்கிடையே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடன் போலீசார் விசாரணை திரும்பியது. இதற்கிடையே நடந்த சம்பவத்துக்கு தானே பலியாவதாக கூறிய ஏர்.ஆர். ரஹ்மான் முன்பதிவு செய்துவிட்டு நிகழ்ச்சியை காண முடியாதவர்களுக்கு பணம் திருப்பி தரப்படும் என அறிவித்தார். அதன்படி ஒவ்வொருவரின் வங்கி கணக்கிற்கு அவர்கள் முன்பதிவு செய்த பணம் திருப்பி அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனத்தின் ஹேமந்த் ராஜா மற்றும் மேலும் இருவர் மீது 188 மற்றும் 406 என்ற இரண்டு பிரிவுகளின் கீழ் தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது. மேலும், 20,000 பேருக்கு அனுமதி பெற்று விட்டு 45000 பேருக்கு டிக்கெட் விற்பனை செய்ததால் சம்பவ இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும், அவர்கள் கணக்கு காட்டியவர்களின் தேவைக்கு ஏற்ப போலீசார் பாதுகாப்புக்கு அனுப்பப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.