ஒரு சுயாதீன இசையமைப்பாளராக 80களில் தன் இசைப் பயணத்தை தொடங்கி, ஆஸ்கர் நாயகனாக உருவெடுத்து , இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக தற்போது மாறியுள்ளது வரை ஏ.ஆர்.ரஹ்மானின் வளர்ச்சி ஈடு இணையற்றது.


சூஃபியை சந்தித்த ஏ.ஆர்.ரஹ்மான்


இந்நிலையில், தன் இசைப் பயணத்தில், பிரபல இஸ்லாமிய இசை மற்றும் கலை வடிவமான சூஃபித்துவத்தின் பால் ஈர்க்கப்பட்டது முதல், தனது நம்பிக்கை, அதனால் தன் தொழிலில் நிகழ்ந்த மாற்றங்கள் உள்ளிட்டவை பற்றிய பல கேள்விகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தன் சமீபத்திய நேர்க்காணலில் பதில் அளித்துள்ளார்.




Image Source - Twitter/@ARRahmanFC24x7


‘தி க்ளென் கோல்ட் அறக்கட்டளை’  (The Glenn Gould Foundation) எனும் தனியார் நிறுவனம் நடத்திய நேர்க்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ஏ.ஆர்.ரஹ்மான், தான் இஸ்லாமிய மதத்துக்கு மாறியது குறித்தும், சூஃபி கலைஞர் ஒருவரை இக்கட்டான சூழலில் சந்தித்தது பற்றியும் மனம் திறந்துள்ளார்.


தனது தந்தை மரணப் படுக்கையில் போராடியபோது தாங்கள் பல ஆன்மீகவாதிகளை சந்தித்ததாகவும், அந்த நேரத்தில் தங்கள் குடும்பம் சூஃபி ஒருவரை சந்திக்க நேர்ந்ததாகவும் கூறியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.


“அந்த நேரத்தில் சூஃபி கலைஞர் நீங்கள் 10 ஆண்டுகளுக்குப் பின் என்னை மீண்டும் அணுகுவீர்கள் என்று கூறினார். அவர் கணித்தது போல் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூரில் இருந்து ஸ்டுடியோ ஒன்றில் உபகரணங்களைப் பெறும்போது அவரை மீண்டும் சந்தித்தோம், அவர் எங்களை ஆசிர்வதித்தார்” என ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.


தொழில் முன்னேற்றம்


தொடர்ந்து இஸ்லாம் பற்றி பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், “நீங்கள் இந்தக் கடவுளை நம்பி வர வேண்டும் என்று யாரும் எங்களிடம் கூறவில்லை. நான் அமைதியான நிலையை உணர்ந்தேன். எனக்கு வேண்டியவை நடப்பது போல் ஒரு சிறப்பான தருணத்தை உணர்ந்தேன்.


என்னுடைய நிராகரிக்கப்பட்ட பணிகள், நான் பிரார்த்தனையில் ஈடுபட்ட பின் ஏற்றுக்கொள்ளப்பட்டன.  இந்த நிலையில் தான் ஒரு புதிய நம்பிக்கையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று என் தாயிடம் கூறினேன், அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார்” என ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.


தொடர்ந்து தாங்கள் இஸ்லாமிய மதத்துக்கு மாறிய பின்,  குடும்பம் எதிர்கொண்ட சமூக மாற்றங்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்ட நிலையில்,  அதற்கு பதிலளித்த  ரஹ்மான் “இந்தியர்கள் மக்களை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள், நாங்கள் எந்தவிதமான பாகுபாட்டையும் எதிர்கொள்ளவில்லை” என்றார்.


‘தென்னிந்தியர்கள் சிறப்பானவர்கள்’


மேலும்,  "இந்தியர்கள் மிகவும் திறந்த மனதுடையவர்கள். அதிலும் தென்னிந்தியர்கள் மிகவும் வெளிப்படையானவர்கள்.  நம்மை அரவணைப்பவர்கள், மகிழ்ச்சியான மக்கள். நாமும் வாழ வேண்டும், மற்றவர்களும் வாழ வேண்டும் என்றே அவர்கள் விரும்புகிறார்கள். அதுதான் நடந்தது” என ரஹ்மான் பேசியுள்ளார்.


 



எனினும் கடந்த சில ஆண்டுகளில் அரசியல் சூழல் காரணமாக இந்தியாவில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியுள்ளார்.


முன்னதாக சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்த்திய விங்ஸ் ஆஃப் லவ் (Wings of Love) சூஃபி இசை நிகழ்ச்சி நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், இணையத்திலும் லைக்ஸ் அள்ளி வைரலானது குறிப்பிடத்தக்கது.