இயக்குநர் கே.வி ஆனந்த்




இன்று இயக்குநர் கே.வி.ஆனந்தின் மூன்றாவது ஆண்டு நினைவு தினம். பெரும்பாலான ரசிகர்களுக்கு கே.வி ஆனந்தை ஒரு இயக்குநராக மட்டுமே தெரியும் . ஆனால் பத்திரிகையாளர் , புகைப்படக் கலைஞர்  , ஒளிப்பதிவாளர் என அவருக்கு பல முகங்கள் உண்டு.


இந்த துறைகளில் வெறுமனே பணியாற்றியது மட்டுமில்லை அதன் உயந்த அங்கீகாரங்களையும் பெற்றவர். லயோலா கல்லூரியில் காட்சி தொடர்பியல் முடித்த கே.வி.ஆனந்த் பத்திரிகைகளில் ஃபோட்டோ ஜர்னலிஸ்டாக வேலை செய்தார். கல்கி,இந்தியா டுடே என மொத்தம் 200 பிரபலமான இதழ்களில் இவர் எடுத்த புகைப்படங்கள் முகப்புப் படமாக வெளிவந்திருக்கின்றன. சுமார் 20 முதலமைச்சர்களை அருகில் இருந்து ஃபோட்டோ எடுத்திருக்கிறாராம் கே.வி.ஆனந்த்.


ஒளிப்பதிவாளர் கே.வி ஆனந்த்




புகைப்பட கலைஞராக இருந்து பின் ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் இடம் உதவியாளராக இருந்து, அவருடன் பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். பி.சி ஸ்ரீராமின் பரிந்துரையின் பேரில்  மலையாளப் படமான தென்மாவின் கொம்பத் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.


இந்த படத்திற்கான சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை வென்றார் கே.வி ஆனந்த். தமிழில் கே.வி ஆனந்த் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிய படம் காதல் தேசம். இதனைத் தொடர்ந்து ஷங்கர் போன்ற பல முதன்மையான இயக்குநர்களின் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார்.


சினிமாவில் புதுமை..




கனா கண்டேன் படத்தின் மூலம் இயக்குநராக அவதாரமெடுத்தார் . அவர் இயக்கிய முதல் படம் 100  நாட்கள் திரையரங்கில் ஓடியது. ஒரு இயக்குநராக கமர்ஷியல் சினிமாக்களில் எப்போது புதுமையை முயற்சிப்பவராக கே.வி ஆனந்த் இருந்திருக்கிறார். பத்திகையாளராக , ஒளிப்பதிவாளராக தான் தெரிந்துகொண்ட அனுபவங்களை தனது படங்களில் சிறப்பாக பயன்படுத்தினார்.


அயன் , கோ , மாற்றான்  , அனேகன், காப்பான் என தன் படங்களில் ஒவ்வொரு முறையும் ஒரு புது கான்செப்ட்டை அறிமுகப்படுத்தி இருக்கிறார். விறுவிறுப்பான திரைக்கதை , புதுப்புது தொழில் நுட்பங்கள் , தகவல்கள் என படத்தை சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறார்.  வெற்றியடைந்தாலும் தோல்வியடைந்தாலும் கே.வி ஆனந்த் படம் என்றால் கண்டிப்பா ஏதாவது சுவாரஸ்யமாக இருக்கும் என்று அவரது படங்களை பார்க்க செல்லும் ரசிகர்களே அதிகம். 


எதிர்பார்க்காத மரணம் 


கொரோனா நோய்த்தொற்று உச்சத்தில் இருந்தபோது கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார் கே.வி ஆனந்த். அவரது மறைவு தமிழ் திரையுலகினருக்கு ரசிகர்களுக்கு இன்றுவரை ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பாக இருந்து வருகிறது . இன்று அவரது மூன்றாவது நினைவு தினத்தில் ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் நினைவு கூர்ந்து வருகிறார்கள்.


இந்த மனுஷன் மட்டும் இருந்திருந்தால் கண்டிப்பா நல்ல கமர்ஷியல் படங்களைக் கொடுத்திருப்பார் என்று ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை பகிர்ந்து வருகிறார்கள்