தனக்கு எதனால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது தெரியவில்லை என அப்பா படத்தில் நடித்த நசாத் வருத்தம் தெரிவித்துள்ளார். 


நடிக்கும் ஆசையில்லை:


கடந்த 2016 ஆம் ஆண்டு சமுத்திரகனி இயக்கத்தில் வெளியான படம் “அப்பா”. இந்த படத்தில் நமோ நாராயணின் மகனாக நடித்திருந்தவர் நசாத். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அவர், உயரம் குறைவாக இருந்த நிலையில் சாதிக்க அது தடையே இல்லை என்பதை நிரூபிக்கும் கேரக்டரில் நடித்திருப்பார். அதன்பின்னர் கொளஞ்சி, தொண்டன், பிழை உள்ளிட்ட படங்களில் நடித்த நசாத் பின்னர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. 


இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள அவர், “எனக்கு சினிமாவில் நடிக்க பெருசா ஆசையெல்லாம் கிடையாது. மூடர் கூடம் படம் எடுத்த இயக்குநர் நவீன் முதலில் கொளஞ்சி என்ற படம் எடுத்தார். அந்த படத்தில் தான் முதலில் நடித்தேன். ஆனால் முதலில் வெளியானது அப்பா படம் தான். பேஸ்புக்கில் என்னுடைய வீடியோ ஒன்றை நண்பர்கள் பதிவிட என் அண்ணனுடைய நண்பர் மூலமாக தான் கொளஞ்சி வாய்ப்பு கிடைத்தது. நான் அப்போது 9 ஆம் வகுப்பு தான் படித்து கொண்டிருந்தேன். நான் 10ஆம் வகுப்பு வரை தான் படித்தேன். ஷூட்டிங் போன நிலையில் படிப்பை விட்டுவிட்டேன். 


என் வாழ்வில் முக்கியமானவர் சமுத்திரகனி:


கொளஞ்சி படத்தில் நடிக்கும்போது தான் சமுத்திரகனி என்னிடம் போன் நம்பர் வாங்கினார். பின்னர் ஒருநாள் சென்னைக்கு வர முடியுமா என கேட்டார். நான் கிராமத்தில் வளர்ந்த பையன் என்பதால் எனக்கு போகவே பயமாக இருந்தது. அப்படி இருந்த பையனை கூட்டிச்சென்று கேமரா முன்னால் நிறுத்தினால் எப்படி இருக்கும்?. 


அப்பா படத்தில் என்னுடைய கேரக்டரில் வேறு ஒருத்தர் நடிக்க வேண்டியது. ஆனால் ஒருநாள் இரவில் என்னுடைய நியாபகம் வந்ததும் மொத்த கதையையும் மாற்றினார். படத்தில் அந்த காட்சியை பார்த்தபோது பலர் அழுததாக என்னிடம் சொன்னார்கள். சமுத்திரகனி என் வாழ்க்கையில் முக்கியமான மனிதர். சினிமாவை தாண்டி என் வாழ்க்கையில் நிறைய உதவி பண்ணினார். 


3 வருடம் வீண்:


நிறைய ஆடிஷன் போனேன். ஆனால் நமக்கான வாய்ப்பு கிடைக்கும் என்றால் கண்டிப்பாக கிடைக்கும் என நம்புவேன். நான் 8 மாதங்களுக்கு முன்பு தொழில் ஒன்றை செய்தேன். என் நண்பரை நம்பிய நிலையில் அதில் எனக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது. தெரியாத தொழிலில் இறங்கியிருக்க கூடாது தான். 


அதனால் இப்போது சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். எதனால் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என தெரியவில்லை. கடந்த 3 வருடமாக சும்மா தான் இருக்கிறேன். ஏன் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற காரணத்தை தினமும் தேடிக் கொண்டிருக்கிறேன். என்னால் குடும்ப சூழல் காரணமாக சென்னைக்கு வர முடியவில்லை. ஈரோட்டில் இருப்பதால் தான் வாய்ப்பு கிடைக்கவில்லை என நினைக்கிறேன்” என நசாத் கூறியுள்ளார்.