அப்பா ஒருநாளும் குடித்துவிட்டு பாடல் எழுதியதே இல்லை என்று கண்ணதாசனைப் பற்றி அவரது மகன் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.


ஒரு யூடியூப் சேனலுக்கு அண்ணாதுரை அளித்த பேட்டியில், "அப்பா ஆரம்பநாட்களில் இரவு மட்டும் தான் மது அருந்தினார். பின்னாளில் அது மதிய வேளையில் இரண்டு பெக் என்று ஆனது. அப்பா மது அருந்தும் நேரம் அவருடைய சிந்தனைக்கான நேரம். சிந்தித்துக் கொண்டே இருப்பார். மதுவுக்கு சைட் டிஷ் எல்லாம் வைத்துக் கொள்ள மாட்டார். அளவாக 2 பெக். சில சிகரெட்டுகள். சிந்தனை இவ்வளவு தான் அப்பாவின் மது அருந்தும் நேரம். அப்பா பாடல் எழுதும்போது காலில் செருப்பு கூட அணிய மாட்டார். அந்த அளவிற்கு அவருக்கு தொழில் பக்தி உண்டு. அப்படியிருக்க அப்பா மது அருந்திவிட்டு பாட்டு எழுதினார் என்பதெல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அவிழ்க்கப்பட்ட கட்டுக்கதைகள்.


அப்பாவுக்கு கடன் பிரச்சினை நிறைய இருந்தது. அப்பா எங்களிடம் பேசும்போது நீங்கள் சினிமா எடுக்காதீர்கள். எடுத்தால் பார்ட்னர்ஷிப்பில் எடுக்காதீர்கள். அப்படியே எடுத்தாலும் கையெழுத்து உரிமையை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் என்றார். அப்பாவிற்கு 16 லட்சம் கடன் வந்தது. வி.பி.ராமன் என்ற வழக்கறிஞர் அப்பாவிடம் நீ இன்சால்வன்சி நோட்டீஸ் கொடு என்றார். ஆனால் அப்பா இல்லை நான் கட்டிவிடுகிறேன் என்று கட்டினார். எங்கள் வீட்டு வாசலில் கடனுக்கு ஜப்தி செய்ய டாம் டாம் அடிக்க வந்த போது அப்பாவுக்கு ஃபோன் போகிறது. அப்பா வந்து பணத்தை தந்து பிரச்சனையை சரி செய்கிறார். அப்போது திரும்பிச் சென்று அவர் எழுதிய பாடல் தான் சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் அழுது கொண்டே சிரிக்கின்றேன் என்ற பாடல். அப்பா நிறைய பாடல்கள் தான் சோகமாக இருந்தபோது எழுதியதாக சொல்லியிருக்கிறார். அப்பாவுக்கு கடன் பிரச்சனை இருந்தது. ஆனால் கடனாளியாக அவர் சாகவில்லை. கடனை அடைத்தார். இன்றுவரை அப்பாவால் தான் நாங்கள் வாழ்கிறோம். அப்பா எங்கள் குடும்பத்தை கடனில் விட்டுச் செல்லவில்லை. அப்பாவின் புத்தக ராயல்டியாகவே நாங்கள் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு சராசரியாக 15 லட்சம் பெறுகிறோம்.


அப்பா ஒரு நாள் ரயில் பயணத்தில் வரும்போது அதிகாலையில் வெளியில் பார்க்கும் போது தூரத்தில் ஒரு கோயிலும் அதன் மீது ஒரு விளக்கும் அந்த ஒளியில் ஒரு மணியும் தெரிந்துள்ளது. அதை வைத்து அப்பா எழுதிய பாடல் தான். ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் என்ற பாடல்.


அப்பாவுக்கு இவிகேஎஸ் சம்பத் அண்ணன் மீது உயிர். அவர் தோல்வியடைந்தபோது தான் யாரை எங்கே வைக்க வேண்டும் என்று தெரியவில்லை என்ற பாடலை எழுதினேன்.


அப்பா உணர்ச்சிவசப்படும் ரகம். அப்பா ஒரு மீட்டிங்கில் இவிகேஎஸ் சம்பத் அண்ணா முஸ்தஃபா கமால் பாஷா என்ற துருக்கி புரட்சியாளர் பற்றி பேசியுள்ளார். அந்த கூட்டம் முடிந்த பின்னர் அப்பாவிடம் ஆண் மகன் பிறந்ததை கூற அவர் அண்ணனுக்கு முஸ்தஃபா கமால் பாஷா என்றே பெயர் வைத்து விடுகிறார்.


எனக்கு அண்ணாவின் மீதுள்ள ஈர்ப்பால் அண்ணாதுரை என்று பெயர் வைத்தார். ஆனால் என்னை துரை என்று தான் கூப்பிடுவார். அண்ணாவுக்காக எழுதிய பாடல் தான் நலந்தானா நலந்தானா பாடல்.


அப்பா ஒரு அசைவப் பிரியர். விதவிதமான அசைவ உணவு வேண்டும். ஆனால் எல்லாவற்றையும் அளவாக தான் உண்பார் அப்பாவுக்கு ஓட்டல் உணவே பிடிக்காது” 


இவ்வாறு கண்ணதாசன் பற்றி பல்வேறு சுவாரஸ்ய தகவல்களும் சொல்லியுள்ளார்.