தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் முன்னணி நடிகயாக இருந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. தமிழில் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.பாகுபலி என்னும் பிரம்மாண்ட படத்தில் தேவசேனா என்ற இளவரசி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.அந்த படத்திற்கு பிறகு அனுஷ்காவிற்கு சினிமா வாய்ப்புகள் முன்பை போல கிடைக்கவில்லை. காரணம் அவரின் உடல் பருமன் என கூறப்பட்டது. இந்நிலையில் அனுஷ்கா திரைவாழ்க்கைக்கு முழுக்கு போட்டு திருமணம் செய்து செட்டில் ஆக போகிறார் என கூறப்பட்டது. அதற்கு ஏற்ற மாதிரியாக சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் " எப்போதும் நீங்கள் எனக்கு அளித்த ஆதரவிற்கு நன்றி “ என தெரிவித்திருந்தார். இதனால் அதிர்ந்துபோன அனுஷ்கா ரசிகர்கள் அனுஷ்கா சினிமா துறையை விட்டு விலகுவதாகவே உறுதி செய்தனர்.
இந்நிலையில் அனுஷ்கா நேற்று (நவம்பர் 7) தனது 40 வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக நன்றி தெரிவித்த அனுஷ்கா. சூப்பர் டூப்பர் அப்டேட் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் “உங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் நன்றி. இந்த நாளில் எனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறேன். பி.மகேஷ் பாபு இயக்கத்தில் யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ளது என கூறி வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். இது அவரது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. அனுஷ்கா தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரத்தில்தான் நடிக்க உள்ளாராம். அதற்கான கதைகளை மட்டுமே கேட்டு வருவதாக கூறப்படுகிறது. தமிழில் பி.வாசு இயக்கத்தில் , ராகவா லாரஸ் நடிக்கும் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் அனுஷ்காவை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
கர்நாடக மாநிலத்தில் பிறந்த இவர் சினிமாத்துறைக்கு வருவதற்கு முன்னதாக தனது தந்தையின் வற்புறுத்தலின் பேரில், தனது விடுமுறைக்காலங்களில் யோகா பயிற்சிக்குச் சென்றார். விளையாட்டாக கற்கத்தொடங்கிய நிலையில் அதன் மீது அதீத ஈடுபாடு கொண்டதால் முறையாக பயிற்சி பெற்று யோகா ஆசிரியராகா பணியாற்றினார். இவரது யோகா குரு பரத் தாகூரின், மனைவி புகழ்பெற்ற நடிகை பூமிகா என்பதால், அவர்களின் திரையுலக நண்பர் ஈஸ்வர் நிவாஸ் மூலம் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அனுஷ்காவிற்கு தேடிவந்தது. ஆரம்பத்தில் நடிப்பதில் விருப்பமில்லாத அனுஷ்கா வந்த வாய்ப்புகளையெல்லாம் வேண்டாம் என்று தட்டிக்கழித்தார். பின்னர் பலரின் அறிவுரையின் பேரில் சினித்துறைக்கு வந்த அனுஷ்கா முதன் முதலாக கடந்த 2005 ஆம் ஆண்டு பூரி ஜகன்நாத் இயக்கத்தில் அக்கினேனி நாகார்ஜூனாவுடன் இணைந்து சூப்பர் படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படம் மிகப்பெரிய வெற்றியினைக் கொடுக்கவில்லை என்றாலும், சினிமா வாழ்க்கைக்கு நல்ல துவக்கமாகவே அனுஷ்காவிற்கு அமைந்தது எனலாம்.