அனுராதா ஸ்ரீராம் என்றதும் சட்டென்று நினைவுக்கு வரும் பாடல்
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே
என்ற ஏசு கிறிஸ்துவை வரவேற்கும் பாடல்தான்.
ஏசு கிறிஸ்துவை நெக்குருகி போற்றிப் பாடியிருந்தாலும் அனுராதா ஸ்ரீராமின் இஷ்ட தெய்வம் என்னவோ முருகக் கடவுள்தானாம். அனுராதா ஸ்ரீராம் இசையில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இசையில் டாக்டர் பட்டம் பெற்ற பரசுராமை வாழ்க்கைத் துணையாகப் பெற்றவர். `கலைமாமணி விருது’ உள்பட பல விருதுகளைப் பெற்றவர். அனுராதா ஸ்ரீராம் சினிமாவில் ஐந்தாயிரம் பாடல்கள் வரை பாடியிருக்கிறார். இவை தவிர பக்தி பாடல்களும் ஆயிரக்கணக்கில் பாடியிருக்கிறார்.
அப்பா சொன்ன சஷ்டி காப்பு
என் அப்பா ஒரு பிரபல ஆங்கிலப் பத்திரிகையில் பணியாற்றினார். அவருக்கு முருகக்கடவுள் தான் இஷ்ட தெய்வம். என்னுடைய சிறு வயதில் எங்கள் வீடு சென்னை கேகே நகரில் இருந்தது. அங்கிருந்து வடபழனி முருகன் கோயில் பக்கம் தான். ஆகையால் அவர் வாரந்தோறும் எங்களை அந்தக் கோயிலுக்கு அழைத்துச் சென்றுவிடுவார். என் தம்பிக்கு முருகன் என்று தான் அப்பா பெயர் வைத்தார். முருகனை தரிசித்துவிட்டு சித்தரை வணங்கிவிட்டு வீட்டுக்கு வருவோம். `அபிராமிதாசர்'ங்கிற பேர்ல `அபிராமி அந்தாதி'யில இருக்குற 100 பாடலையும் `லலித சகஸ்ரநாம'த்தையும் ஒப்பிட்டு ஒரு புத்தகம் எழுதினார்.
தினமும் எங்கள் வீட்டில் தவறாமல் ஒலிக்கும் குரல் சூலமங்கலம் சகோதரிகளின் குரல் தான். காலை துயில் எழும்போதே சஷ்டியை நோக்க என்ற சரவண கீதத்துடன் தான் நாங்கள் கண் விழிப்போம். அப்பா என்னைப் பார்த்து எப்போதும் ஒரு வார்த்த சொல்வார். இந்த சஷ்டி தான்மா உங்க கவசம் என்று அப்பா சொல்லிக்கிட்டே இருப்பார். உண்மையில் அப்படித்தான் இருக்கிறது. என் குரல் இனிமையாக இருப்பதற்குக் கூட அப்பா தான் செய்த தேனாபிஷேகம் தான் காரணாம் என்று கூறுவார். அந்த அளவுக்கு அப்பா முருகக்கடவுளிடம் ஐக்கியமாகியிருந்தார்.
எல்லாமே ரமண மகிரிஷிதான்:
முருகக் கடவுள் தான் என் ஆன்மாவில் நிறைந்திருக்கிறார். ஆனால் என்னோட மானசீக குரு ரமண மகரிஷி. ஏனென்றால் நான் அவரையே முருகனுடைய இன்னொரு வடிவமாகத்தான் பார்க்கிறேன். ரமணரின் சீடர்கள் எல்லோருமே அப்படித்தான் பார்க்கின்றனர். முருகனும் ரமணரும் துறந்து கோவணம் அணிந்திருப்பார்கள். ரமணாஸ்ரமத்துக்கு மாதம் ஒரு முறையாவது போயிடுவேன். அவர்தான் எனக்குச் சரணாகதியைக் கற்றுத் தந்தார். நாம ஒண்ணுமே கிடையாது. இறைவன்தான் எல்லாம்கிறதைச் சொல்லித் தந்தவர் ரமணர்.
நான் ரமணாஸ்ரமத்தில் கற்றுக் கொண்ட வாழ்க்கைப் பாடத்தை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். நாம் எப்போதும் நம் வாழ்க்கையில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளும் இறைவன் செய்வது என்று நினைக்கிறோமோ அப்போதே வாழ்க்கையைப் பற்றிய பயம் இருக்காது. எதிர்பார்ப்பு இருக்காது. எதன் மீதும் பற்று வராது. யாரிடமும் கோபம் வராது. வன்மம் தலைக்கேறாது. பகவத் கீதையில் பார்த்தசாரதியின் கையில் ஐந்து குதிரைகளின் கடிவாலம் இருக்கும். அப்படித்தான் நாம் நம் ஐம்புலன்களையும் இறைவனிடம் ஒப்படைக்க வேண்டும். ரமணரின் வார்த்தை There is no others. எல்லாமே இறைவன் தான். இதுதான் என் வாழ்க்கையின் தத்துவம்.
என் முதல் பாட்டு..
பம்பாய் படத்தில் ஒரு கோரஸ் பாடல் வரும்.. மத மோதல்கள் முடிந்து மனிதம் மலரும் தருணத்துக்கான பாடல் அது.
மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும்போது.
மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ...
மதம் என்னும் மதம் ஓயட்டும்.
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்...
அந்தப் பாடல்தான் நான் முதன்முதலாக சினிமாவுல பாடிய பாடல். இந்த 25 ஆண்டுகளில் ஐயாயிரம் பாடல்கள் வரை பாடிட்டேன். ரமணர் சொன்னதுபோல் இது எல்லாம் இறைவனால் சாத்தியமானது.