கடந்த செப்டம்பர் 15ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. வேல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு, சித்தி இத்தானி நடிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
அறிமுகமான சித்தி இத்தானி :
கதாநாயகனாக நடித்த சிம்பு 'முத்து' என்ற கதாபாத்திரத்தில் மும்பைக்கு பணி நிமித்தமாக தென் மாவட்டத்தில் இருந்து வந்த இளைஞனாக நடித்துள்ளார். அவர் அங்கு சந்திக்கும் சம்பவங்களே படத்தின் திரைக்கதையாகும். இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சித்தி இத்தானி தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
பெண்ணின் ஏக்கத்தை வெளிப்படுத்திய பாடல் :
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' படத்தின் மிகவும் பிரபலமான பாடல் பாடகி மதுஶ்ரீ பட்டாச்சார்யா பாடிய 'மல்லிபூ வைச்சு வைச்சு வாடுதே...' பாடல் இன்றும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. கணவனை பிரிந்து வாடும் ஒரு பெண்ணின் ஏக்கத்தை மிகவும் அழகாக பிரதிபலித்துள்ள இந்த பாடலின் வரிகளை எழுதியுள்ளார் பாடலாசிரியர் தாமரை. இந்த பாடலுக்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்து இருந்தார்.
அனுபமாவின் 'மல்லிப்பூ' வர்ஷன் :
பலரின் பேவரட் பாடலான மல்லிபூ பாடலை மலையாளம் கலந்த தமிழில் மிகவும் அழகாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் பாடிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவரின் இந்த கியூட் வர்ஷனுக்கு லைக்ஸ்களும் கமெண்ட்களும் குவிந்து வருகிறது. மேலும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் இந்த அழகான வீடியோவிற்கு 'வெந்து தணிந்தது காடு' படத்தின் ஹீரோயின் சித்தி இத்தானி ' நைஸ் சாங்' என கமெண்ட் செய்துள்ளார்.
மலையாள திரையுலகில் மிகவும் ஹிட் படமான பிரேமம் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் தனுஷ் நடித்த 'கொடி' திரைப்படத்தில் அவரின் ஜோடியாக நடித்திருந்தார். தற்போது தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.