சிலவற்றை நாம் தினமும் தவிர்க்கிறோம். சிலவற்றை தவிர்க்க நினைப்போம்; ஆனால், அவை நம்மை தொடர்ந்து கொண்டே இருக்கும். அப்படி தான், இதுவும். அன்னபூரணி அரசு அம்மாவை நீங்க தவிர்க்க நினைத்தாலும், அவரது பேஸ்புக் பதிவுகள் உங்களை பின் தொடர்ந்து கொண்டே இருக்கும். காரணம், டிசைன் அப்படி! சொற்பொழிவு, தீட்சை, ஆசி என்கிற பெயரில், அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் சில நாட்களாக அதிக நெடி நிறைந்ததாக இருக்கிறது. இன்று அவர் பதிவிட்டுள்ள ஏன் ஆன்மிகம் என்கிற கருத்து, ஒரு தரப்பினரை கடுமையாக சாடும் படி உள்ளது. நமக்கு ஏன் வம்பு... அவர் பதிவை அப்படியே போடுகிறோம் பாருங்கள்....




‛‛ஆன்மீகவாதி எப்படி இருக்க வேண்டும், ஆன்மிகவாதி எந்த மாதிரி இருக்க வேண்டும். என்ன மாதிரி உடை உடுத்த வேண்டும், என்ன வகை உணவு சாப்பிட வேண்டும். அதாவது சைவமா அல்லது அசைவமா?ஆன்மிகவாதி என்பவன் எப்படியுமே இருக்க கூடாது. (வேண்டுமானால் குடுமியும், சாம்பலை பூசிக்கொண்டும், ருத்ராட்சம் அனிந்து கொண்டு) இப்படித்தான் என்றால் அங்கு ஆணவம் வந்து விடும். எந்த விதமான உடையும் (வேண்டுமானால் ஒரு கோவனம்) உடுத்தக்கூடாது



அவன் எந்தவிதமான உணவும் உட்கொள்ளக்கூடாது. (மனித மாமிசம், அல்லது ஒருநாளைக்கு ஒரே ஒரு வாழைப்பழம்) உணவு எதுவும் இன்றி பட்டினியாகத்தான் இருக்க வேண்டும்.இப்படித்தானே அகோரிகளும், சித்தர்களும், யோகிகளும் இருந்தார்கள்.



நீங்களும் அப்படியே இருக்க வேண்டும் இதுதான் உண்மையான ஆன்மிக லட்சனம். இப்படி உங்களால் இருக்க முடியவில்லை என்றால் நீங்கள் ஆன்மிகத்தை பற்றியே பேசக்கூடாது.



இப்பொழுது சொல்லுங்கள் இங்கு யாராவது ஆன்மிகவாதி இருக்கிறீர்களா? முடியவே முடியாது. இதுதான் ஆன்மிகமா. உங்களுடைய பைத்தியக்காரத்தனங்களுக்கு அளவில்லாமல் போய்விட்டது.ஆன்மிகம் என்றால் 'வெறும் அமைதி, வெறும் உணர்வு, ஆனந்தம், வெறும் இருப்பு. இதற்கு பெயர் தான் ஆன்மிகம்.' ஆன்மிகம் என்று நீங்கள் பேசிக்கொண்டிருப்பது கூட ஆன்மிகம் ஆகாது.



பேச்சற்ற நிலையே அது. அதை அடைவதற்கு உங்கள் பேச்சு உதவினால் அதுவும் சரியே. இதை அடையவே அனைத்து வழிகளும்.






இப்பொழுது சொல்லுங்கள் என்ன சாப்பிடலாம். இந்த நிலைக்கும் சாப்பாட்டிற்கும் என்ன சம்பந்தம். ஞானம் உயிர்தன்மை சார்ந்ததா உடல் சார்ந்ததா. உடல் தேவையான சாப்பாட்டு பிரச்சனையையே, இப்பத்தான் நீங்கள் ஆராய்ச்சி செய்தா, நீங்கள் எப்ப உயிர்தன்மைக்கு (ஆன்மிகத்திற்கு) வருவது. எல்லோருக்கும் எப்படி ஒரேமாதிரியான சாப்பாடு சரியா வரும்



. சரி இப்படி சொல்கிறேன் உங்க உடலுக்கு ஒத்துக்கிட்ட எல்லாம் சைவமே. ஒத்துக்கொள்ளாத எல்லாம் அசைவமே. இன்னும் வேறமாதிரி சொல்லனும்னா நீங்கள் இயல்பான விழிப்புணர்வில் ரசிச்சு ருசிச்சு சாப்பிடற எல்லாமே சைவம். டிவி பார்த்திட்டு, போன் பேசிட்டு, வேறு சிந்தனைகள்ள, இயல்பா சாப்பிடாத எல்லாம் அசைவம்.



ஆன்மிகம் என்பது உங்கள் உடல் சார்ந்ததோ, எண்ணங்கள் சார்ந்ததோ, மனம் சார்ந்ததோ, உங்கள் அறிவு சார்ந்ததோ இல்லை. முழுக்க முழுக்க அது உங்கள் உணர்வு (உயிர்தன்மை) சார்ந்தது. உணவோ, உடையோ, பணமோ, உலகப்பொருட்களோ, இல்லற வாழ்வோ அதற்கு ஒரு விசயமே இல்லை. நிறைய பேர் உடலிலும், மனதிலுமே சிக்கி கொண்டு தங்கள் வாழ்வை தொலைக்கிறார்கள்.



போக்குவரத்து வசதி இல்லாத அந்த காலத்தில் ஒருவர் நடந்தே ஒரு இடத்திற்கு சென்றார் என்பதற்காக கார், பஸ், ரயில், விமானம் உள்ள இந்த காலத்திலும் நான் அப்படித்தான் செல்வேன் என்று அடம்பிடித்தால் அது உங்கள் பிரச்சனை.



உண்மையான தாகம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் தான் தண்ணீரை தேடிச் செல்வீர்களா, அல்லது தண்ணீர் உங்களை தேடி வருகிறதா? தண்ணீர் என்னைத் தேடி வந்தால் தான் நான் குடிப்பேன் என்று நீங்கள் இருந்தால் நடித்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று பொருள்’’

என்று அன்னபூரணி அரசு அம்மா, தனது பதிவில் கூறியுள்ளார். ஆன்மிகத்தின் அடையாளமாக கூறப்படும் அத்தனையையும் விலாசி வாங்கியுள்ளார். உண்மையில், ராஜா ராணி நாற்காலியில் அமர்ந்து, பட்டுப்புடவை சகிதமாக, சைலண்ட் மோட் கலந்த வைபிரேஷன் மோட் ஆசி மட்டும் தான் ஆன்மிகம் என்கிறார் அன்னபூரணி!