அன்னபூரணி அரசு அம்மா, சுதந்திரதினத்தன்று அம்மன் வேடம் பூண்டு ஆசிரமத்தில் அருளாசி வழங்கியதை நாம் அனைவரும் அறிந்திருப்போம். தலையில் கிரீடம், கையில் சூலம், கழுத்து நிறைய நகை, சிம்மாசன சேர் அத்தோடு சிவப்பு கம்பள வரவேற்பு என புது வித கெட்டப்போடு அன்னபூரணி அருளாசி வழங்கியதை ஊடகங்கள் பரவலாக செய்தி வெளியிட்டன. வழக்கம் போல, பிரபல சேனல் ஒன்றும் அதை தனது பாணியில் செய்தியாக்கியிருந்தது.
இதை கண்டு கோபத்தின் உச்சத்திற்கு சென்ற அன்னபூரணி சற்று நேரத்திற்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வழக்கமான வைரபிரேஷன் அருளாசிக்கு பதிலாக, வாய்க்கு வந்த வார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளார். இதோ அந்த பேச்சு...
‛‛ஒரு நியூஸ் சேனலில் இருந்து போன் செய்தீர்கள் என்பதால் தான், மதிப்பு கொடுத்து , பொறுமையாக பதில் கொடுத்தேன். ஒளிபரப்பினால், அதை முழுமையாக ஒளிபரப்புங்கள்; அதை விட்டு விட்டு உங்களுக்கு தேவையானதை எடிட் செய்து ஒளிபரப்புகின்றனர். நீங்கள் கேள்வி கேட்ட விதத்திலேயே உங்கள் தரம் மக்களுக்கு தெரிந்திருக்கும். ஒரு நியூஸ் சேனல் மாதிரியா கேள்வி கேட்குறீங்க, ஒரு நியூஸ் சேனல் மாதிரியா அதை ஒளிபரப்பு பண்றீங்க. ஆரம்பத்திலிருந்தே அவதூறாக தான் சித்தரித்து போடுறீங்க. எல்லா சேனலும் தான் தர்ஷன நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள். நடப்பதை தான் ஒளிபரப்பு செய்கிறார்கள்.
ஆனால், நீங்கள் மட்டும் தான் நேரில் வந்து கண்ணால் பார்த்து. எடுத்துட்டு போய் தவறா தான் சித்தரித்து போடுறீங்க. நீங்க அவதூறா போட்ட அத்தனை செய்திக்கும் காலம் பதில் சொல்லிவிட்டது. நான் ஏற்கனவே சொன்னது தான், இயற்கை எதற்காக வந்ததோ, அதன் வேலையை நிறைவேற்றி தான் போகும். அதை யாரும் எதிர்த்து போராட முடியாது. அந்த இயற்கையை உணர ஒரு தகுதி வேண்டும். எல்லாரும் அதை உணர முடியாது. இன்னும் இயற்கை அதற்கான பதிலை தரும். அதற்கு ரொம்ப காலம் ஆகாது, கூடிய விரைவில் விரைவில் பதில் சொல்லும்.
இனி அந்த சேனலுக்கு என் ஆசிரமத்தில் அனுமதியில்லை. எதற்குமே என் ஆசிரமத்திற்குள் அந்த சேனல் வர முடியாது. இன்னும் சில யூடியூப் சேனல்கள் இருக்கின்றன. அவர்களுக்கு ஆன்மிகத்தை பற்றி ஒரு மண்ணும் தெரியாது. அங்கே வந்து, நடக்கிற பக்தி பூர்வமான நிகழ்வில் கலந்து கிட்டு என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வதில்லை. இருக்கிற இடத்தில் இருந்து, எங்கள் யூடியூப் சேனலில் இருந்து வீடியோக்களை எடுத்து, பின்னணி குரல் கொடுத்து ஒளிபரப்புகிறார்கள். அவர்கள் எல்லாம் தெருவில் போகும் நாய்களுக்கு சமம். அதுகளுக்கு பதில் அளிப்பதே வேஸ்ட்.