ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‛சொல்வதெல்லாம்’ நிகழ்ச்சியில் வந்தார், அதன் பின் 2022 புத்தாண்டு செங்கல்பட்டு ஆசி வழங்கும் நிகழ்ச்சிக்கு வருவதற்கான அறிவிப்பில் சிக்கினார். இது தான் அன்னபூரணி அரசு அம்மாவின் இப்போதைய அப்டேட். அவரது அடிப்படை என்ன... எங்கிருந்தார்... என்ன செய்தார்... திடீரென ஆன்மிக குளத்தில் குதிக்க காரணம் என்ன.... இப்படி பல கேள்விகளுக்கு விடை தெரியாமல், ட்ரோலர்கள் மட்டுமல்லாமல், வலைதள தோழர்களும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது தான், அன்னபூரணி அரசு அம்மா பற்றிய தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் முக்கிய தகவல், சொல்வதெல்லாம் நிகழ்ச்சிக்கு பின்-புத்தாண்டு தரிசன அறிவிப்புக்கு முன், என்ன செய்து கொண்டிருந்தார் என்பது தெரியவந்துள்ளது. அவரது பேட்டியில் குறிப்பிட்ட ஒரு விசயத்தை, இத்தோடு ஒப்பிட்டு பார்க்கலாம். ‛நானும் அரசும் சக்தியை உணர்ந்தோம். இரு உடலில் அந்த சக்தி, வழிகாட்டியது. இருவரும் பிறரின் ஆனந்தத்தை வழிநடத்த தொடங்கினோம்; அரசு உடல் அழைக்கப்பட்ட போது அவருள் இருந்த சக்தி, என் சக்தி உடன் இணைந்தது; அந்த சக்தி தான்... அடுத்ததாக என்னை உந்தி இயங்க வைக்கிறது,’ என கூறியிருந்தார்.
அரசு இறந்த பின், அவரது சிலையை பூஜித்த அன்னபூரணி, இயற்கை ஒளி ஃபவுண்டேஷன் என்கிற அமைப்பை தொடங்கியுள்ளார். ஆன்மிக பயிற்சி அளிக்கப்படும் என்ற அந்த மையத்தின் அறிவிப்பில், ஒளிவட்டம் சூழ்ந்த பின்னணில், முன்னணியாய் புகைப்படத்தில் நிற்கிறார் அன்னபூரணி அரசு அம்மா. ஆதாய நோக்கமில்லா அமைப்பு என அதற்கு டேக்லைனும் உண்டு. சிறப்பு என்னவென்றால், கவலை என்று வருவோருக்கு 3 நாளில் ஆனந்தம் வழங்கி, ஆசி வழங்கி அம்மா அன்பை பொழிவாராம்!
இயற்கை ஒளியை தேடி பலர் படையெடுக்க, அவர்களுக்கு ஆனந்தத்தை அம்மா அள்ளிக்கொடுத்தார் என்கிறார்கள் அவரால் ஒளியை பெற்றவர்கள். அதுவும் அந்த கூகுள் பக்கத்தில் உள்ள கமெண்ட்ஸில் குறிப்பிடப்பட்டிருக்கும் கமெண்ட்களை பார்த்தால், மனிதனுக்கு எந்த கவலையைாக இருந்தாலும் நேராக அன்னபூரணி அரசு அம்மாவிடம் சென்று விடுவார்கள். அந்த அளவிற்கு ஒரே ஆதரவு மயம். அங்கிருந்து தான், அம்மாவின் ஆட்டம் ஆரம்பித்திருக்கிறது.
தனக்கென ஒரு கூட்டம் கூடத்தொடங்கியதும், காஞ்சிரம் மாவட்டத்தின் கடைகோடியில் இருந்த தன் சாம்ராஜ்ஜியத்தை, செங்கல்பட்டுக்கு மாற்றி, அடுக்க கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முயற்சித்தார். அவரது கடந்த கால வீடியோ, இந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என அவர் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார். இதில் என்ன ஸ்பெஷல் என்றால், தன் சேனையை செங்கல்பட்டுக்கு நகர்த்துவதற்காக தனது பவுண்டேஷனை நிரந்தரமாக இழுத்து மூடியுள்ளார். அதுவும் கூகுள் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று அதுவும் போச்சு... இதுவும் போச்சு!
இப்போது புதிதாக மற்றொரு திருமண சர்ச்சை வேறு இணைந்திருக்கிறது. அந்த நபர் தான், அன்னபூரணியை ஆட்டி வைத்தார். அரசு சிலையை பூட்டி வைத்தார் என்கிறார்கள். எது எப்படியோ... இயற்கை ஒளியில் தொடங்கி, ஸ்டூடியோ ஒளியில் எடுத்த வீடியோவால் தேடப்படுபவராக மாறியிருக்கிறார் அன்னபூரணி அரசு அம்மா!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்