பெரும் எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு திரையரங்குகளில் தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியாகியுள்ளது `அண்ணாத்த’ திரைப்படம். இயக்குநர் சிவா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ் ராஜ், குஷ்பூ, மீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் `அண்ணாத்த’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.


`அண்ணாத்த’ படம் தற்போது தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ஓடி வருகிறது. மேலும், இந்தப் படம் கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இந்நிலையில், `அண்ணாத்த’ படம் இணையத்தில் சட்ட விரோதமாக வெளியிடக்கூடாது எனக் கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. சுமார் 385 கோடி ரூபாய் பொருட் செலவில் உருவாகி இருப்பதால், சட்ட விரோதமாக இணைய தளங்களில் வெளியானால் பெரும் நஷ்டத்தைச் சந்திக்கும் எனக் கூறப்பட்டு, `அண்ணாத்த’ படம் இணைய தளங்களில் வெளியிடுவதற்குத் தடைவிதிக்க வேண்டும் என சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. 



சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் `அண்ணாத்த’ படத்தை சட்ட விரோதமாக இணைய தளங்களில் வெளியிடுவதற்குத் தடை விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று `அண்ணாத்த’ படம் திரையரங்குகளில் வெளியானதோடு, Tamil blasters என்ற இணைய தளத்திலும் சட்ட விரோதமாக வெளியாகியுள்ளது. திரையரங்கு ஒன்றில் காணொளிப் பதிவு செய்யப்பட்டிருப்பதுபோல இந்தப் படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் தரப்பிலும், ரசிகர்களும் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். 


எனினும் `அண்ணாத்த’ படம் குறித்து பல்வேறு பிரபலங்கள் தங்கள் கருத்துகளைத் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.