தமிழ் திரையுலகம் மட்டுமின்றி, இந்திய சினிமாவிலும் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தர்பார் படத்திற்கு பிறகு, ரஜினிகாந்த் இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாமதமானது.


இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு பிறகு அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. நடிகர் ரஜினிகாந்தும் டப்பிங் பேசி முடித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், அண்ணாத்த படத்தின் புதிய அப்டேட்டை இந்த படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.






இதன்படி, அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் பார்வை  விநாயகர் சதுர்த்தி தினமான நாளை காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது என்றும். படத்தின் மோஷன் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாத்த படம் வரும் நவம்பர் மாதம் 4-ந் தேதி தீபாவளி வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தீபாவளி வெளியீட்டை அண்ணாத்த படம் உறுதி செய்துள்ளது.


சன்பிக்சர்ஸ் நிறுவனம் இந்த அறிவிப்புடன் அண்ணாத்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் ரஜினிகாந்த் திரும்பி நிற்பது போன்று உள்ளது. அவர் கோரைப்புற்கள் நிரம்பிய ஒரு கிராமப்புற கோயிலில் நிற்கிறார். அவருக்கு பின்னால் ஏராளமான ஈட்டிகள் சிவப்பு நிற துண்டுகள் கட்டப்பட்ட நிலையில் உள்ளது. அங்கு கிராமப்புறங்களில் உள்ள குலதெய்வ கோயில் போன்ற கோயில் உள்ளது.




ரஜினிகாந்தின் முன்பு இரவு நேரத்தில் விளக்குகளால் ஒளிரும் நகரம் ஒன்று உள்ளது. அது அமெரிக்காவின் நியூயார்க் நகரம் ஆகும். முழுக்க முழுக்க கிராமத்து சாயலில் உருவாகியதாக அண்ணாத்த கூறப்பட்டிருந்த நிலையில், படத்தின் போஸ்டரில் நியூயார்க் நகரம் இடம்பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் இன்னும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.


இந்த திரைப்படத்தில் நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், தெலுங்கு நடிகர் கோபிசந்த், சூரி, சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இயக்குனர் சிவா இயக்கத்தில் கடைசியாக வெளியான அஜித்குமாரின் விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்த டி. இமானே இசையமைத்துள்ளார். ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு குடும்பபாங்கான திரைப்படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக கூறப்பட்டிருந்த நிலையில், அண்ணாத்த படத்தை தொடங்கினார். ஆனால், அவர் உடல்நலக்குறைவு மற்றும் கொரோனா ஆகியவற்றின் காரணமாக அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்தார். ரஜினிகாந்த் அரசியலுக்கு தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அறிவித்த பிறகு வெளியாக உள்ள முதல் படம் அண்ணாத்த என்பது குறிப்பிடத்தக்கது.