அனிருத் தமிழ் திரையுலகின் தற்போதைய ட்ரெண்டிங் இசையமைப்பாளர். இந்நிலையில் அவரது தந்தை ரவிச்சந்தர் மகனைப் பற்றி மனம் திறந்த பேட்டியளித்துள்ளார்.
அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
சின்ன வயதில் எல்லாம் அனிருத் பாடவே மாட்டார். திடீரென பாட ஆரம்பித்தார். இப்போ அவர் குரலைக் கேட்க எனக்கே வியப்பா இருக்கு. ஆனால் அவர் குரலில் ஓர் உணர்வு இருக்கிறது. அதைத் தான் மக்கள் ரசிக்கின்றனர். அவர் எப்படி பாடகரானார் என்று கேட்டால் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது என்பேன்.
நான் சினிமாவில் சம்பந்தப்பட்டிருந்தாலும் கூட அனிருத் எந்தப் படத்திற்கு இசையமைக்க வேண்டும். யாருடன் பணியாற்ற வேண்டும் என்று எதையுமே நான் சொன்னதில்லை. அதில் நான் தலையிடுவதே இல்லை. அது அனிருத்தின் முடிவு. கதைகளைக் கேட்டு அவன் தான் அதை முடிவு செய்வான். கடவுள் அவனுக்காக எல்லாவற்றையும் இறுதி செய்கிறார். மற்ற விஷயங்களை நான் தான் மேனேஜ் செய்கிறேன் என்பது உண்மை.
ஒவ்வொரு மேடையிலும் அனிருத் ரவிச்சந்திரன் என்று முழங்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. அதைவிட சந்தோஷமாக இருக்கிறது என்பது தான் உண்மை. இதற்கெல்லாம் காரணம் கடவுள் கிருபை, மக்கள் ஆசிர்வாதன். அவன் ஆசைப்பட்டதை அடைந்துவிட்டான். நாம் எதை விரும்பி நினைத்து செய்கிறோமோ அதுவே நமக்கு வாழ்க்கையாக மாறிவிடும். அதுதான் அனிருத் வாழ்க்கையில் நடந்துள்ளது.
இப்போது பெரிய வெற்றிகள் வந்துள்ள நிலையில் கடவுள் அவனுக்கு நிதானத்தையும் கொடுத்துள்ளார். அந்த நிதானம் தான் அவனது தனிச்சிறப்பு. அனிருத் ஒரு கடின உழைப்பாளி. அண்மையில் சங்கர் மகாதேவனைப் பார்த்தேன். அவர் அனிருத்தைப் புகழ்ந்துள்ளார். இசையில் அனிருத் லேயரிங் என்பதில் கலக்குகிறார் என்றார். அதாவது ஒரு பாட்டை மெருகேற்றுகிறார். அது தான் மேஜிக்.
அனிருத் பாடல்களில் எனக்கு நான் பிழை, நீயும் நானும் சேர்ந்தே பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல் தெலுங்கில் நிறைய மெலடி பாடல்கள் செய்துள்ளார்.
பேட்டை திரைப்படத்தில் அவரின் பேக்கிரவுண்ட் இசை எனக்கு ரொம்ப பிடிக்கும். அண்மையில் விக்ரம் படத்திலும் பேக்கிரவுண்ட் மியூசிக்கில் கலக்குகிறார்.
ராக்கெடரி தி நம்பி விளைவு படத்திலும் மாதவன் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக இசையமைத்துள்ளார். அந்த படத்தின் கதையை மாதவன் சொன்ன பின்னர் தான் நம்பி நாராயணன் பற்றி எனக்கு தெரியவந்தது. அந்தப் படத்திற்காக அனிருத் நிறையவே மெனக்கிடல் செய்தார்.
ஒரு பாடலுக்கு ஒரு குறிப்பிட்ட கலைஞர் வேண்டுமென்றால் அவர் ஒரிசாவில் இருந்தாலும் எப்படியாவது வரவழைத்துவிடுவார். அந்த மாதிரியான மெனிக்கிடல்கள் தான் அனிருத்தின் வெற்றிக்குக் காரணம். அதனாலேயே நான் அனிருத்தின் தந்தை என்பதில் பெருமிதம் கொள்வதைத் தாண்டி மகிழ்ச்சி கொள்கிறேன்.
இவ்வாறு அனிருத்தின் தந்தை அனிருத் ரவிச்சந்தர் கூறினார். இவர் சினிமாவில் நிறைய குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.