இந்தப் படத்தைப் பார்க்காமல் எந்த ஒரு 90ஸ் கிட்ஸூம் வளர்ந்திருக்க முடியாது எனும் அளவுக்கு 90களின் குழந்தைகளை  பிரம்மாண்டத்தால் வியக்க வைத்து உற்சாகப்படுத்திய திரைப்படம் ஜூராசிக் பார்க்.


இன்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்போது முதல் தரம் பார்த்தபோது உணர்ந்த அதே சிலிர்ப்பை, வியப்பை ஜூராசிக் பார்க் படம் கடத்துவதற்கான காரணம் தான் என்ன?


இயற்கையும் அறிவியலும் மனிதத்தவறும்!




1993ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட்டின் என்றென்றைக்குமான க்ளாசிக் திரைப்படம் ஜூராசிக் பார்க். திரையரங்குகளில் அன்றைய குழந்தைகளை அலறவைத்து திகிலூட்டிய இத்திரைப்படம், அறிவியலையும் மிகத் தெளிவாகவும் அழகாகவும் அனைவருக்கும் எடுத்துரைத்தது.


பிரபல தொல்லியல் நிபுணர்களான டாக்டர் ஆலன் கிராண்ட் - எல்லீ தம்பதியை, தன் மில்லியன் டாலர் ரகசிய ப்ராஜக்ட் ஒன்றுக்காக, பெரும் பணக்காரரான ஜான் ஹோமட் தன் இடத்துக்கு பெரும் முயற்சி செய்து வரவழைக்கிறார். அழிந்து போன இனமான டைனோசர்கள் மீது பெரும் விருப்பம் கொண்டவரான டாக்டர் ஆலனுக்கு, பல கோடி ரூபாய் செலவில் மீண்டும் டைனோசர்களை உயிருடன் கொண்டு வரும் முயற்சிகள் நடைபெறுவதும், அதற்கான தீம் பார்க் பணிகளுக்காக தான் வரவழைக்கப்பட்டுள்ளதும் அங்கு வந்த பிறகு தான் தெரிகிறது. 


இவற்றின் இடையே மனிதத் தவறு ஒன்றின் காரணமாகவும் பேராசையாலும் இந்த தீம்பார்க்குக்கு நேர்வது என்ன, அறிவியலின் உதவியால் மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட டைனோசர்களின் கதி, அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்ற கேள்விகளுக்கான பதிலை, திக் திக் வினாடிகளுடன்  திரை விருந்தாக அளித்த படம் தான் ஜூராசிக் பார்க்!


2023இலும் ஆச்சர்யப்படுத்தும் தொழில்நுட்பம்




1993ஆம் ஆண்டு ஜூராசிக் பார்க் படங்களின் ஆரம்பப் புள்ளியாக வெளியான இப்படம்,  ஹாலிவுட்டின் புகழ்பெற்ற பிரம்மாண்ட இயக்குநர் ஸ்டீஃபன் ஸ்பீல்பர்க்கின் கனவுப்படம். மனித இனம் என்றென்றும் பார்த்து வியக்கும், வாழ்ந்து மறைந்த உயிரினமான டைனோசர்களை இவ்வளவு தத்ரூபமாக இதற்கு முன் எவரும் திரையில் பார்த்தில்லை!


இன்றும் நம்மை மயிர்க்கூச்செறிக்க வைக்கும் காட்சிகளுடன் வந்த இப்படத்தைப் பார்த்து பார்த்து செதுக்கியிருந்தார் ஸ்டீஃபன் ஸ்பீல்பர்க் என்றே சொல்லலாம்! படத்தின் தொழில்நுட்பத்தில் கொஞ்சமும் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளாமல் உழைத்த படக்குழு, டி ரெக்ஸ் (T Rex), வெலாசிரேப்டார்ஸ் (Velociraptors) ப்ராக்கியாசரஸ் (Brachiosaurus) என  பிரம்மாண்ட டைனோசர் வகைகளை திரையில் உலவவிட்டு நம் கண்களுக்கு விருந்தளித்தது.


வாழ்க்கை அதற்கான வழியைக் கண்டறியும்


மைக்கேல் க்ரிக்டன் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட இக்கதை, சுமார் ஐந்து லட்சம் டாலர்களுக்கு வாங்கப்பட்டு, பின் சில மாற்றங்களுடன் திரைப்பட வடிவம் பெற்றது.


"Life Find its way" எனும் மற்றொரு அறிவியலாளரான இயான் கதாபாத்திரத்தின் பிரபல வசனமே இப்படத்தின் உயிர் நாடி! படத்தை வெறும் கமர்ஷியல் அம்சங்களுடன் மட்டும் அணுகாமல், புத்தகத்தில் வலியுறுத்தப்பட்ட அறிவியல் கருத்துகளையும் பொறுப்புடன் கையாண்டு,  வசனங்களை இப்படத்தில் மிக நேர்த்தியாகக் கையாண்டிருப்பார்கள்.


வரலாற்று சாதனை


இயற்கையை எந்த சக்தியாலும் கட்டுப்படுத்த முடியாது, இயற்கையை அறிவியல் எவ்வாறு பொறுப்புடன் அணுக வேண்டும் என்பது குறித்து படம் நெடுகவே தத்துவார்த்த ரீதியில் உரையாடி இருப்பார்கள்.


 



பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன் அழிந்த டைனோசர் இனத்தை மீண்டும் நம் கண் முன் நிறுத்த இப்படத்தில் செலவிடப்பட்ட மனித உழைப்பு விலை மதிப்பில்லாதது. குறிப்பாக சிஜி காட்சிகளில் இந்தப் படக்குழு தந்த உழைப்பும் தத்ரூபமாக டைனோசர்களை திரையில் உலவவிட்ட விதமும் தான், அடுத்தடுத்து கிராஃபிக் காட்சிகளை மையப்படுத்தி வந்த ஹாலிவுட் படங்களுக்கு அடிப்படையாக அமைந்தது.


30 ஆண்டுகளுக்கு முன்னரே கிட்டத்தட்ட 500 கோடிகளுக்கு மேல் செலவழித்து எடுக்கப்பட்ட இப்படம், ஹாலிவுட்டில் அன்றைய காலக்கட்டத்தில் அதிகம் வசூலித்த  படமாக உருவெடுத்தது.  1995ஆம் ஆண்டு என்பிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இப்படம், 65 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று தொலைக்காட்சி வரலாற்றில் பெரும் சாதனை படைத்தது. 


இப்படம் மூன்று ஆஸ்கர் விருதுகள் உள்பட 20க்கும் மேற்பட்ட விருதுகளை அந்த ஆண்டு வென்றது.  காலம் கடந்து 30 ஆண்டுகளுக்கும் மேல் நம்மை அதே ஆச்சர்யத்தில் உறையவைத்து உற்சாகப்படுத்த இன்றளவும் ஜூராசிக் பார்க் தவறுவதே இல்லை!