நேற்று டிசம்பர் 1ஆம் தேதி மூன்று திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. தமிழைப் பொறுத்தவரை லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த அன்னப்பூரணி மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த பார்க்கிங் ஆகிய இரண்டு படங்களும் பாக்ஸ் ஆஃபிஸ் போட்டியில் உள்ளன. இந்த இரண்டு படங்களையும் விட அதிகமான வரவேற்பு பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ள அனிமல் திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது. இந்நிலையில், இந்த மூன்று படங்களின் முதல் நாள் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷனைப் பார்க்கலாம்.


அனிமல்


ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள அனிமல் திரைப்படத்துக்கு அமித் ராய் ஒளிப்பதிவு செய்து, அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார். டி சீரீஸ் ஃபிலிம்ஸ், பத்ரகாலி பிக்சர்ஸ் மற்றும் இனி ஒன் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை இணைந்து தயாரித்துள்ளது. 


சந்தீப் ரெட்டி வங்காவின் முந்தைய படமான அர்ஜூன் ரெட்டி படத்தைப் போல் அனிமல் திரைப்படமும் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. அதே நேரத்தில் கமர்ஷியல் திரைப்பட ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான ஒரு ஆக்‌ஷன் படமாகவும் திருப்தியளித்துள்ளது. நீண்ட நாட்களுக்குப்  பிறகு ரன்பீர் கபூரை திரையில் பார்க்க ரசிகர்களின் ஆர்வம் இந்தப் படத்தின் வசூலிலும் பிரதிபலித்துள்ளது.


அனிமல் திரைப்படம்  நேற்று  முதல் நாளில் மட்டும் உலக அளவில் ரூ.116 கோடி வசூலித்துள்ளது. எந்த விடுமுறையும் இல்லாத போதும் இவ்வளவு பெரிய வசூலைக் குவித்து சாதனை படைத்துள்ளது அனிமல் திரைப்படம்.






பார்க்கிங்


ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா ரவிச்சந்திரன், இளவரசு உள்ளிட்டோர் நடிப்பில் ராம்குமார் பாலாகிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள பார்க்கிங் திரைப்படம் ரசிகர்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு கார் பார்க்கிங் செய்வதற்காக இரண்டு நபர்களுக்கு இடையில் ஏற்படும் ஈகோ மோதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் வெளியான முதல் நாளில் ரூ 35 லட்சம் வசூல் ஈட்டியுள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளை வெளியிடும் sacnilk தளம் பகிர்ந்துள்ளது.


அன்னபூரணி


தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடப்படும் நடிகை நயன்தாராவின் 75ஆவது திரைப்படமாக ‘அன்னபூரணி’ நேற்று  திரையரங்குகளில் வெளியாகியது. புதுமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கி  நடிகர்கள் ஜெய், சத்யராஜ், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் குமார், அச்யுத் குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். 


அன்னபூரணி திரைப்படம் முதல் நாளில் ரூ. 60 லட்சம் வசூலித்துள்ளதாக sacnilk தளம் பகிர்ந்துள்ளது. இன்று இரண்டாவது நாளாக சுமார் 50 லட்சம் ரூபாய் வரை படம் வசூல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.