செல்ஃபோனில் படம் பார்த்தபடி அறுவை சிகிச்சை


ஆந்திரா அரசு மருத்துவமனையில் நோயாளி செல்ஃபோனில் ஜூனியர் என்.டி.ஆர் படத்தைப் பார்த்தபடி இருக்க மருத்துவர்கள் அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்துள்ள நிகழ்வு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஆந்தலக்‌ஷ்மி என்கிற 55 வயது பெண்ணுக்கு மூலையில் கட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. தனியார் மருத்துவமனை செல்ல வசதியில்லாத காரணத்தில் இவர் காக்கிநாடா அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அறுவை சிகிச்சையின்போது அவர் விழித்துக்கொண்டு இருப்பதற்காக மருத்துவர்கள் அவருக்கு பிடித்த படமான ஜூனியர் என்.டி.ஆர் நடித்த அதுர்ஸ் படத்தினை அவருக்கு போட்டுக்காட்டியுள்ளார்கள் . 


இரண்டரை மணி நேரம் நீடித்த இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாகவும் அடுத்த ஐந்து  நாட்களில் அந்த பெண் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 






awake craniotomy - விழிப்பு நிலை அறுவை சிகிச்சை


மருத்துவ உலகில் நிகழ்ந்திருக்கும் பெரும் சாதனைகளில் ஒன்றுதான் இந்த awake craniotomy அறுவை சிகிச்சை முறை. மூளையில் அறுவை சிகிச்சை செய்யும்போது நரம்பியல் செயற்பாடுகள் செயலிழக்காமல் இருக்கவும் மேலும் கட்டியை முழுவதுமாக நீக்கவும் இந்த சிகிச்சை முறை.  அதிக பயனுள்ளதாக கருதப்படுகிறது. நோயாளிகள் விழித்திருக்கும் போது அறுவை சிகிச்சை நடக்கையில் அது நரம்பியல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகளையும் குறைப்பதாக கருதப்படுகிறது.


இந்த மாதிரியான சிகிச்சை நடப்பது இது முதல் முறை அல்ல.  சமீபத்தில்  உத்தர பிரதேசத்தில் உள்ள கல்யாண் சிங்க் கேன்சர் மையத்தில் இதேபோன்ற சிகிச்சை ஒன்று வெற்றிகரமாக  நடந்து முடிந்தது. சிகிச்சை நடந்த நேரம் முழுவதும் நோயாளி தனது செல்ஃபோனை பயன்படுத்தியபடியே இருந்தார். கூடுதல் ஆச்சரியமளிக்கும் விதமாக கடந்த ஜனவரி மாதம் டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில்  ஐந்து வயது சிறுமிக்கு  இதே முறையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது.