ரஜினியால் அரசியலுக்கு வர முடியாத நிலையில், அவர் ஏன் அரசியல் பேச வேண்டும் என நடிகை ரோஜா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.


ரஜினிகாந்த் தான் ஆந்திர அரசியலின் இப்போதைய ஹாட் டாபிக். கடந்த வாரம் என்.டி.ராமாராவ் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு அவர் பேசிய கருத்துகள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கட்சியினரிடையே கடுமையான கருத்து மோதல்களை உருவாக்கியுள்ளது. 


என்ன பேசினார் ரஜினி? 


இந்நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், “தொலைநோக்கு பார்வை கொண்ட அரசியல் தலைவரான சந்திரபாபு நாயுடுவால் தான் ஹைதராபாத் இப்போது ஹைடெக் சிட்டியாக மாறிவிட்டது. எனக்கும் அவருக்கும் 30 ஆண்டுகாலம் நட்பு உள்ளது.  சர்வதேச அரசியலிலும் சந்திரபாபுவுக்கு நல்ல பிடிப்பு உள்ள நிலையில், அரசியலில் அவர் ஒரு தீர்க்கதரிசி” என பல விஷயங்களை பேசினார். மேலும் அடுத்தாண்டு அங்கு சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ரஜினியின் இந்த பேச்சு ஆளும்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது. 


கடுப்பான ரோஜா 


ரஜினியின் பேச்சுக்கு  கடும் எதிர்ப்பு தெரிவித்த ஆந்திர சுற்றுலாத் துறை அமைச்சரான நடிகை ரோஜா, நடிகராக அவர் மேல் எனக்கு மரியாதை உள்ளது என்றும், அவருக்கு  தெலுங்கு மாநில அரசியல் குறித்து எதுவும் தெரியாது.  எனவும் சரமாரியாக விமர்சித்தார். அப்போது ரஜினியை ஜீரோ என சொன்னதால் ரஜினி ரசிகர்கள் கொதித்தெழுந்தனர். ரோஜா பேச்சுக்கு சந்திரபாபு நாயுடுவும் எதிர் கருத்து தெரிவித்தார். மேலும் ரோஜா சார்ந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் ரஜினியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். 


ரஜினியை மீண்டும் விமர்சித்த ரோஜா


இதனிடையே பிரபல ஊடகம் ஒன்றிற்கு நேர்காணல் அளித்துள்ள நடிகை ரோஜா, ரஜினியை சரமாரியாக விமர்சித்துள்ளார். அதில், “ஆந்திர அரசியல் தெரியாமல் ரஜினி பேசியது தவறு தான் என்றும், என்.டி.ஆருக்கு சந்திரபாபு நாயுடு துரோகம் இழைத்தார் என்றும் கூறியுள்ளார். மேலும் நான் ரஜினியின் ரசிகை தான். அவருடன் நடித்தும் உள்ளேன். ஆனால் ஒரு வரலாற்று பின்னணிகள் தெரியாமல் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என ரோஜா கூறியுள்ளார். 


அதேசமயம், “கொஞ்ச நாளைக்கு முன்னாடி மீனாவின் நிகழ்ச்சியில் ரஜினியை நான் சந்தித்தேன். என்னுடைய செயல்பாடுகளை பற்றி பாராட்டி பேசினார். நான் 20 வருஷமா அரசியல்ல இருக்கேன். ஆனால் நான் என்ன ரஜினி மாதிரி அரசியலுக்கு வர்றன்னு சொல்லிட்டு வராமலா இருந்தேன். நிலைமை இப்படி இருக்கும்போது அவர் ஏன் அரசியல் பேசணும்?” எனவும் ரோஜா அந்த நேர்காணல் குறிப்பிட்டுள்ளார். 


நான் அரசியலில் இருப்பதால் தான் ரஜினிகாந்த் இதுபோன்ற விஷயங்களை சரி செய்ய வேண்டும் என சொல்கிறேன். ரஜினிகாந்த் சந்திரபாபுவுக்கு சப்போர்ட் செய்யும்போது எங்களை தான் மக்கள் தவறாக நினைப்பார்கள். நாங்கள் ரஜினியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு சொல்கிறார். நாங்கள் ஏன் கேட்க வேண்டும். ரஜினியின் நட்பு போனாலும் பரவாயில்லை. ரஜினி அவரோட கருத்தை வாபஸ் பெறுவதோடு மட்டுமல்லாமல் ஆந்திரா மக்களிடம் மன்னிப்பு கேட்கணும்” என ரோஜா கூறியுள்ளார்.