தமிழ் சினிமாவின் 'டாப் ஸ்டார்' என கொண்டாடப்படும் நடிகர் பிரஷாந்த் லீட் ரோலில் நடித்திருக்கும் திரைப்படம் 'அந்தகன்- தி பியானிஸ்ட்'. வரும் ஆகஸ்ட் 9ம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியிடப்பட்டது. கடந்த ஞாயிறு அன்று சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், மறைந்த நடிகர் மனோபாலா, லீலா சாம்சன், பூவையார், செம்மலர் அன்னம், மோகன் வைத்யா, பெசன்ட் ரவி, லஷ்மி பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரவி யாதவ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை ஸ்டார் மூவிஸ் நிறுவனத்தின் கீழ் திருமதி சாந்தி தியாகராஜன் தயாரிக்க பிரீத்தி தியாகராஜன் வழங்குகிறார்.
இயக்குநர் மற்றும் நடிகருமான கே.எஸ். ரவிக்குமார் பேசுகையில் "இந்த படத்தில் நடித்தது ஒரு ஜாலியான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குநர் தியாகராஜன் வந்துவிட்டால், மகனாக இருந்தாலும் பிரசாந்த் அமைதி ஆகிவிடுவார். அவருடைய மனதில் பயபக்தி வந்துவிடும். இப்போதெல்லாம் யாரும் இயக்குநரைப் பார்த்து பயப்படுவதில்லை. இயக்குநர்கள் தான் பயப்படுகிறார்கள். சந்தோஷமாக தொடரும் இந்த அனுபவம் படத்தின் வெளியீட்டிற்கு பிறகும் தொடர வேண்டும் என விரும்புகிறேன். படத்தின் வெற்றி விழாவில் அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். இந்த படம் ரசிகர்களின் ஆதரவுடன் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்" என பேசி இருந்தார்.
நடன கலைஞர் கலா பேசுகையில் "இப்படமும் அதன் பாடல்களும் மிக சிறப்பாக உள்ளது.பாடலுக்கான நடன காட்சிகளை எட்டு மணி நேரத்தில் நிறைவு செய்தோம். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடல்களை சுடச்சுட வழங்கியுள்ளார். டாப் ஸ்டார் பிரசாத்தை பற்றி சொல்ல வேண்டும். அவர் பியானோ வாசிக்க தெரிந்ததால் படப்பிடிப்பு தளத்தில் பாடல்களை பாடுவதுடன் அந்தப் பாடலை பியானோவிலும் வாசித்துக் கொண்டே பாடினார். அது வித்தியாசமான அனுபவமாக இருந்தது" என்றார்.
நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில்,"அந்தகன்' படத்தைப் பற்றி நான் நிறைய பேசி இருக்கிறேன். இருந்தாலும் அவை போதாது. ஏனெனில் இந்த படத்திலும், படப்பிடிப்பு தளத்திலும் ஏராளமான அன்பினை உணர்ந்தேன். 'எவ்ரிபடி லவ்ஸ் பிரசாந்த்...'பிரசாந்த் மீது அன்பு செலுத்தாதவர்கள் யாரும் இல்லை.'அந்தகன்' திரைப்படம் இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும். நானும் இந்த திரைப்படத்தை ரசிகர்களுடன் திரையரங்கத்தில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்." என்றார்.
நடிகை பிரியா ஆனந்த் பேசுகையில் "இயக்குநர் தியாகராஜன், பிரஷாந்த் பற்றி மட்டுமே பேசுகிறோம். ஆனால் அவர்கள் வீட்டில் இருக்கும் பிரஷாந்த் அம்மா மற்றும் ப்ரீத்தி தான் அவர்கள் இந்த இடத்தில இருக்க காரணம். இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறும். வெற்றி விழாவில் சந்திப்போம். இப்படம் விஷுவலாக பிரம்மாண்டமாக இருக்கிறது" என்றார்.
நடிகை சிம்ரன் பேசுகையில், "தியாகராஜனின் இயக்கத்தில் 'அந்தகன்' படம் மிக சிறப்பாக வந்து இருக்கிறது. இந்த வாய்ப்பை எனக்கு அளித்ததற்கு நன்றி. இது பிரசாத்துடன் நான் நடிக்கும் ஏழாவது திரைப்படம்" என்றார்.
நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில், "எனக்கு தியாகராஜனை பார்த்தாலே பயம். எப்படி என்றால் நான் திரையரங்கத்தில் ஆப்பரேட்டராக பணியாற்றிய போது 'மலையூர் மம்பட்டியான்' படத்தை ஓட்டி இருக்கிறேன். 'கொம்பேறி மூக்கன்' படத்தை திரையில் பார்க்கும் போதே எனக்குள் பதட்டம் வந்துவிடும்.
அவர் போனில் வணக்கம் என்று சொன்னவுடன், நான் படப்பிடிப்புக்கு வந்து விடுகிறேன் என்று பதில் அளித்து விட்டேன். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் நேரில் அவருடன் பழகும் போது தான் அவரின் பேரன்பினை உணர்ந்தேன்.
அவருடைய தோற்றம், ஆளுமை... அதை பார்த்துவிட்டு நாமும் இந்த வயதில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் ஏற்படுத்தியது. அவருடைய அன்பிற்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்." என்றார்.
இயக்குநர் தியாகராஜன் பேசுகையில் " 'அந்தகன்' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதுவே எனக்கு உற்சாகத்தை அளிக்கிறது. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார். மேலும் அவர் பேசுகையில் படத்தில் நடித்திருந்த ஒவ்வொரு நடிகர்களின் தனித்துவம் பற்றியும் பேசி இருந்தார்.
நடிகர் பிரசாந்த் பேசுகையில் அந்தகன் படத்தில் அவருடன் இணைந்து நடித்த ஒவ்வொருமுறையும் பற்றியும் அவர்கள் உடனான நட்பு குறித்து மிகவும் விரிவாக பேசி இருந்தார். இப்படத்தில் பணியாற்றுவது வித்தியாசமான அனுபவமாக இருந்தது என பேசி இருந்தார் நடிகர் பிரஷாந்த்.