லியோ படத்தின் போஸ்டரை குறிப்பிட்டு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடிகர் விஜய்க்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். 


இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்துக்குப் பின் இந்த கூட்டணி 2வது முறையாக இணைந்துள்ளார். இந்த படத்தில் த்ரிஷா ஹீரோயினாக நடிக்கிறார். இதன்மூலம் விஜய் - த்ரிஷா கூட்டணி 15 வருடங்களுக்குப் பின் ஜோடி சேர்ந்துள்ளது. இதனால் பட அறிவிப்பு வெளியான போதே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. 


மேலும் இந்த படத்தில் இந்திய திரையுலகின் மிக முக்கிய நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். அதன்படி,  சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், இயக்குநர்கள் கெளதம் மேனம், மிஷ்கின், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான்,மேத்தியு தாமஸ்,ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். மேலும் சிங்கம் ஒன்றும் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 


படத்தின் டைட்டில் வெளியானபோது படமானது அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதற்கேற்றாற்போல் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இன்னும் சில நாட்களில் ஷூட்டிங் முடியவுள்ள நிலையில் அடுத்தடுத்து படத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே வரும் ஜூன் 22 ஆம் தேதி நடிகர் விஜய் 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 


இதனை முன்னிட்டு லியோ படத்தில் இருந்து ‘நான் ரெடி’ என்னும் பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், இதுதொடர்பான போஸ்டர் கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் நடிகர் இப்படி நடந்துக் கொள்ளலாமா என பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


அந்த வகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “லியோ திரைப்படத்தின்  முதல் அறிவிப்பில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி  இடம் பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது. நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை  குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர். அவர் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதைப் பார்த்து அவர்களும் அப்பழக்கத்திற்கு ஆளாகிவிடக் கூடாது. புகைப்பழக்கத்திலிருந்து பொதுமக்களைக் காக்கும் சமூகப் பொறுப்பும் அவருக்கு உண்டு.  சட்டமும் அதைத் தான் சொல்கிறது. எனவே, நடிகர் விஜய் கடந்த 2007, 2012-ஆம் ஆண்டுகளில் உறுதியளித்ததைப் போலவே திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். 


முன்னதாக 2007 ஆம் ஆண்டு அழகிய தமிழ் மகன், 2012 ஆம் ஆண்டு துப்பாக்கி, 2018 ஆம் ஆண்டு சர்கார் ஆகிய படங்களிலும்,அது தொடர்பான போஸ்டர்களிலும் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றது. இதற்கு அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.