ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீத்தா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள் கடந்த மார்ச் மாதம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் முக்கியான வி.ஐ.பிக்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள்கள், சர்வதேச அளவிலான பிரபலங்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்டின் இரண்டாவது திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள் தற்போது இத்தாலியில் மே 29ம் தேதி துவங்கி ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள அம்பானியின் மொத்த குடும்பமும் இத்தாலிக்கு படையெடுத்துள்ளது. மேலும் பாலிவுட் பிரபலங்களான சல்மான் கான், ரன்பீர் கபூர், அலியா பட், ஜான்வி கபூர், கரீனா கபூர் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இத்தாலிக்கு விரைந்துள்ளனர். ஐரோப்பிய க்ருஸ் கப்பலில் நான்கு நாள் பிரமாண்டமாக இந்த கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாவதற்கு முன்னரே ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண அழைப்பிதழ் சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் வரும் ஜூலை 12ம் தேதி நடைபெறவுள்ளது. அம்பானி குடும்ப வழக்கத்தின் படி இந்து வேத பாரம்பரிய முறைப்படி ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற உள்ளது. ஜூலை 12ம் தேதி சுப விவாக நிகழ்வு துவங்குகிறது. ஜூலை 13ம் தேதி சுப ஆசீர்வாத நிகழ்வும் ஜூலை 14ம் தேதி மாலை மங்கள உற்சவமும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட்டின் திருமண அழைப்பிதழை ANI தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. பெருமாள் நாமத்துடன் அச்சடிக்கப்பட்டுள்ள இந்த அழைப்பிதழில் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் அதில் திருமண நிகழ்வுக்கு வரும் விருந்தினர்கள் அனைவரும் என்ன டிரஸ் கோடில் வரவேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூலை 12ம் தேதி விருந்தினர்கள் அனைவரும் பாரம்பரிய இந்திய உடையிலும், ஜூலை 13ம் தேதி இந்திய பார்மல் உடையிலும், ஜூலை 14ம் தேதி 'இந்தியன் சிக்' தீமை மையமாக வைத்து உடை அணிந்து வர சொல்லி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மிகவும் பிரமாண்டமாக மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண வைபவத்தை சிறப்பாக செய்து வருகிறார்கள் முகேஷ் அம்பானி மற்றும் நீத்தா அம்பானி தம்பதி.