எம்.ஜி.ஆர் தொடங்கி பலரும் திரைப்படமாக்க முயன்று தோற்றுப்போன கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை பிரபல எழுத்தாளர் ஜெயமோகனுடன் கைகோர்த்து திரைமொழிக்கு மாற்றியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப்படத்தின் ப்ரோமோஷன் சார்ந்த பணிகள் கடந்த மாதம் தொடங்கிய நிலையில், நேற்று படத்தின் முதல் பாடலான ‘பொன்னி நதி’ பாடல் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் வெளியான அந்தப்பாடல் மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடர்பான நிகழ்ச்சி நேற்று சென்னை எக்ஸ்ப்ரஸ் அவன்யூயில் நடந்தது.
120 நாட்களில் முடிக்கப்பட்ட ஷூட்டிங்
இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ஜெயராம், ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது படத்தின் குறித்தான ஒரு சின்ன சீக்ரெட்டை சொன்னார் கார்த்தி. அது ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரு பாகங்களின் ஷூட்டிங்கை இயக்குநர் மணிரத்னம் வெறும் 120 நாட்களில் முடித்து விட்டார் என்றார்.
இதைக் கேட்ட ரசிகர்கள் பலரும் 120 நாட்களிலேயே முடித்துவிட்டாரா... அப்படியென்றால் படம் எப்படி இருக்கும்.. நன்றாக வந்திருக்குமா..பாகுபலியை பீட் பண்ணுருமா.. போன்ற கேள்விகளை கேட்டு வருகின்றனர்.
இதில் மற்றொரு கேள்வி என்னவென்றால் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் 5 பாகங்களை கொண்ட நிலையில், படமும் அதே போல பாகங்களின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டிருக்குமா இல்லை.. இரண்டரை பாகங்கள் சேர்த்து, ஒவ்வொரு பாகமாக எடுக்கப்பட்டிருக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
புத்தகத்தில் கதை எங்கு முடிகிறது?
நாவலின் முதல் பாகத்தில் இலங்கையில் போர்க்களத்தில் இருக்கும் அருள்மொழி வர்மருக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்து குறித்து விளக்கி, அவரைக் காக்க தன்னுடைய நண்பன் பார்த்திபேந்திரனை அனுப்ப முடிவெடுக்கிறான் இளவரசன் ஆதித்ய கரிகாலன். இதுசம்பந்தமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது தனக்கும் பழுவூர் இளையராணி நந்தினிக்கும் இடையிலான கடந்தகால உறவு பற்றியும் முதல்முறையாகத் தனது மனதைத் திறந்து காட்டுகிறான். அத்தோடு அந்தப்பாகம் முடியும்
இராண்டாம் பாகத்தில், இலங்கையில் இருந்து தன் தந்தை சுந்தர சோழரின் கட்டளைக்கு ஏற்ப, நாடு திரும்ப முடிவெடுக்கும் அருள்மொழி வர்மர், கப்பலில் செல்ல முடிவெடுக்கிறார். இதற்கிடையே அராபியர்கள் கொள்ளையடித்துச் சென்ற சோழ நாட்டுக் கப்பலில் அருள்மொழி வர்மர் இருப்பார் என்று நினைத்து, அந்தக் கப்பலை நோக்கி வந்தியத்தேவன் குதித்துச் செல்கிறான்.
அதில் இருக்கும் அராபியர்கள் மற்றும் மந்திரவாதி ரவிதாஸனிடம் மாட்டிக்கொள்கிறான்.வந்தியத்தேவனைக் காப்பாற்ற அந்தக் கப்பலுக்குச் செல்கிறார் அருள்மொழிவர்மர். கடலில் ஏற்படும் புயல் காரணமாக கப்பல் உடைந்து, இருவரும் நடுக்கடலில் மாட்டிக்கொள்கின்றனர். படகோட்டி மகளும் சமுத்திரகுமாரியுமான பூங்குழலி, இளவரசருக்கு ஏதேனும் ஆகியிருக்குமோ என்ற எண்ணத்தில் கடலில் அருள்மொழிவர்மரைத் தேடிக்கொண்டு வருகிறாள். அத்தோடு அந்த பாகம் முடியும். படமும் இந்த வடிவில்தான் எடுக்கப்பட்டிருக்குமா என்பதை செப்டம்பர் 30 ஆம் தேதி தெரிந்து கொள்ளலாம்.
இப்படிதான் முடிக்கப்படுகிறதா படத்திலும், அல்லது நாவலின் பாகங்களும், படத்தின் பாகங்களும் மாறுபடுகிறதா என்பதை இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்து தான், அறிய வேண்டியுள்ளது.