2021 மார்ச் 7 ம் தேதி வெளியான ‛எனஜாய் எஞ்சாமி...’ பாடல், தனி ஆல்பமாக பெரிய ஹிட் ஆனது. இன்றைய நாள் வரை, 42 கோடியே 97 லட்சத்து 82 ஆயிரத்து 355 பார்வையாளர்களை பெற்று, சாதனை படைத்துள்ளது அந்த ஆல்பம். இசையமைப்பாளர் சந்தோஷ்நாராயணன் இசையில், அவரே தயாரித்த இந்த பாடலை, இயக்குனர் அமித் கிருஷ்ணா இயக்கியிருந்தார்.
பாடகர்கள் தீ மற்றும் அறிவு ஆகியோர் இந்த பாடலை பாடி, ஆடி, நடித்திருந்தனர். பூர்வகுடிகளின் வாழ்க்கை முறையை விளக்கும் விதமாக அமைந்திருந்த இந்த பாடல், பட்டி தொட்டியெல்லாம் சென்று, அனைவரையும் ஆட்டம் போட வைத்து , லைக்ஸ், கமெண்ட்ஸ், ஷேர் என அனைத்தையும் அள்ளியது.
இந்த பாடல், பாடகி தீ மற்றும் பாடகர் அறிவுக்கு பெரிய அளவில் வெளிச்சம் தந்தது. ஆனால், அதே நேரத்தில் பெரிய பெரிய சர்ச்சைகளையும் சந்தித்தது. குறிப்பாக பாடகர் அறிவுக்கு, பெரிய ஏமாற்றங்களை அடுத்த நாட்களில் தரக் காத்திருந்தது ‛என்ஜாய்... எஞ்சாமி...’ பாடல்.
ரோலிங் ஸ்டோனின் என்கிற இதழ், பிரபல இசை குறித்த அட்டை படம் ஒன்றை அப்போது வெளியிட்டது. அதில், என்சாய் எஞ்சாமி பாடலும், நீயே ஒலி ஆகிய பாடல்கள் குறித்து சிறப்பித்து எழுதியிருந்தது. அதற்கான அட்டை படத்தில், பாடகி தீ மற்றும் ஷான் வின்சென்ட் டீ பால் ஆகியோரின் போட்டோக்களை அட்டை படத்தில் வெளியிட்டிருந்தது.
இதை தெருக்குரல் அறிவின் ஆதரவாளர்கள் கடுமையாக சாடினார்கள். இருவர் பாடிய பாடலுக்கு எப்படி ஒருவர் படத்தை மட்டும் பயன்படுத்தலாம் என கடுமையாக கண்டனத்தை தெரிவித்தனர். குறிப்பாக இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்டோர், அறிவுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று ட்விட்டரில் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து உடனே தங்கள் முடிவை மாற்றிய ரோலிங் ஸ்டோனின் இதழ், மீண்டும் அறிவு படத்துடன் கூடிய புதிய அட்டை படத்தை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து பெரிய அளவில் எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது ரோலிங் ஸ்டோனின்.
அதன் பிறகு, சமீபத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மீண்டும் எழுந்திருக்கிறது என்ஜாய் எஞ்சாமி சர்ச்சை. தமிழரின் நாகரீக வரலாறு தொடர்பான கலை நிகழ்ச்சிகள், செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் இடம் பெற்றது. அதில், என்ஜாய் எஞ்சாமி பாடலும் இடம் பெற்றது. ஆனால், அதில் அறிவு இடம் பெறவில்லை. மாறாக, பாடகி தீ மட்டும் பங்கேற்று பாடினார். இது தொடர்பாக மீண்டும், அவரது ஆதரவாளர்கள் கேள்விகளை எழுப்பத் தொடங்கினர்.
ஆனாலும், அறிவு தரப்பில் இது தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், இன்று செஸ் ஒலிம்பியாட் ‛என்ஜாய் எஞ்சாமி’ தொடர்பாக மனம் திறந்திருந்துள்ளார் அறிவு. அதில்
‛‛நான் "இசையமைத்தேன்" "எழுதினேன்" , பாடினேன்" & "நடித்தேன்" என்ஜாமியை அனுபவிக்கவும். இதை எழுத யாரும் எனக்கு ஒரு டியூனையோ, மெலடியையோ அல்லது ஒரு வார்த்தையோ கொடுக்கவில்லை. இப்போது இருக்கும் அனைத்திற்கும் கிட்டத்தட்ட 6 மாதங்கள் தூக்கமில்லாமல், மன அழுத்தம் நிறைந்த இரவுகளையும் பகலையும் கழித்தேன்.. இது ஒரு சிறந்த குழுப்பணி என்பதில் சந்தேகமில்லை. அது அனைவரையும் ஒன்றாக அழைக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது வள்ளியம்மாளின் சரித்திரமோ அல்லது நிலமற்ற தேயிலைத் தோட்ட அடிமை என் முன்னோர்களின் சரித்திரமோ அல்ல. என்னுடைய ஒவ்வொரு பாடலும் இந்த தலைமுறை ஒடுக்குமுறையின் அடையாளமாக இருக்கும்.
இந்நாட்டில் 10000 நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளன. முன்னோர்களின் மூச்சு, அவர்களின் வலி, அவர்களின் வாழ்க்கை, அன்பு, அவர்களின் எதிர்ப்பு மற்றும் அவர்களின் இருப்பு பற்றிய அனைத்தையும் சுமந்து செல்லும் பாடல்கள். இது அனைத்தும் அழகான பாடல்களில் உங்களிடம் பேசும். ஏனென்றால் நாம் இரத்தமும் வியர்வையுமான விடுதலைக் கலைகளின் மெல்லிசைகளாக மாறிய தலைமுறை. பாடல்கள் மூலம் பாரம்பரியத்தை எடுத்துச் செல்கிறோம். நீங்கள் உறங்கும் போது உங்கள் பொக்கிஷத்தை யார் வேண்டுமானாலும் அபகரிக்கலாம். நீங்கள் விழித்திருக்கும் போது ஒருபோதும் அது நடக்காது. ஜெய்பீம்.
முடிவில் எப்பொழுதும் உண்மையே வெல்லும்’’
என்று அந்த பதிவில் அறிவு தெரிவித்துள்ளார்.