எப்போது பார்த்தாலும் ப்ரெஷ் ஃபீல், ஒன்ஸ் மோர் பார்க்க தூண்டும் ரகம் என்ற பட்டியலில் ஏராளமான தமிழ் திரைப்படங்கள் வரிசை கட்டி வந்தாலும் ஒரு சில படங்கள் என்றுமே ரசிகர்களுடன் ஒரு கனெக்ட்டில் இருந்து கொண்டே இருக்கும். அப்படி இன்றும் கொண்டாடப்படும் ஒரு படம் தான் கே. பாக்யராஜ் இயக்கி நடித்த 'முந்தானை முடிச்சு'. ஒட்டு மொத்த திரையுலகையே திரும்பிப் பார்க்கவைத்த வெற்றியை கொடுத்த இப்படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
பாக்யராஜ் டச்:
ஒரு குறுகிய நேரத்தில் ஏ.வி.எம் நிறுவனத்துக்காக பாக்யராஜ் எழுதிய கதை தான் 'முந்தானை முடிச்சு'. ஏவிஎம்மிற்கு திரைக்கதையை காட்டிலும் மிகவும் ஈர்க்கக்கூடிய விஷயமாக இருந்தது படத்தின் தலைப்பு. அப்படி உருவான இந்த கதையில் மனைவியை இழந்த ஒரு கணவன் பிடிவாதமாக மறுமணம் செய்து கொள்ள மாட்டேன் என் வீரப்பாக இருந்த தனது நண்பன் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இக்கதையை உருவாக்கினார்.
துணையை இழந்த கணவன் அல்லது மனைவி அந்த துயரில் இருந்து மீளமுடியாமல் மறுமணத்திற்கு சம்மதிக்காமல் இருந்து பின்னர் மெல்ல மெல்ல மனதை மாற்றி அந்த வாழ்க்கையோடு ஒத்துப்போவது போன்ற ஏராளமான திரைக்கதைகளை தமிழ் சினிமா கண்டுள்ளது. இருப்பினும் அக்கதையை இயக்குநர்களின் ஸ்டைலில் கையாள்வது என்பதில் தான் ஸ்வாரஸ்யம் உள்ளது. அப்படி பழகிப்போன ஒரு திரைக்கதையை தனது வித்தியாசமான அணுகுமுறையால் அனைவரும் அசந்து போகும் வெற்றியை கொடுத்து இருந்தார் பாக்யராஜ். பெண் ரசிகைகளின் ஏகபோக வரவேற்பை பெற்ற இப்படம் அனைத்து சென்டர்களிலும் தூள் கிளப்பியது.
நிகரில்லா நடிகை ஊர்வசி:
குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படத்தில் பல படங்களில் நடித்த ஊர்வசி தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்திக் ஜோடியாக 'தொடரும் உறவு' படத்தில் நடித்திருந்தாலும் அப்படம் 1986ம் ஆண்டு தான் வெளியானது. அதனால் ஊர்வசி நடிப்பில் தமிழில் ஒரு ஹீரோயினாக அறிமுகமான முதல் படம் 'முந்தானை முடிச்சு'. இன்றுடன் நிகரில்லா நடிகை ஊர்வசி தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்து 40 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இப்படத்தில் அவரின் பரிமளம் கதாபாத்திரம் மிகவும் எதார்த்தமாக ஒரு 13 வயது சிறுமிக்கு இயல்பாக இருக்கும் குறும்புத்தனம் அப்படியே வெளிப்பட்டது. கதாபாத்திரத்தோடு அது பொருந்தியும் போனது.
படத்துக்கு ஹைலைட்:
படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் பாக்யராஜ் டச் பளிச்சென வெளிப்படும். அதிலும் தீபாவின் கிளாமர் என ஊரே அவர் பின்னால் செல்லும் சமயத்தில் தீபாவை உன்னதப்படுத்தும் பாக்யராஜ் சற்றே உயர்ந்து நின்றார். கிராமத்தின் மொத்த அழகையும் அப்படியே கேமராவுக்குள் அடக்கி திரையில் மாயாஜாலம் செய்து இருந்தார். படத்துக்கு கூடுதல் வலுசேர்த்தது இளையராஜாவின் இசை.
வா வா வாத்தியாரே வா, கண்ண தொறக்கணும் சாமி, அந்தி வரும் நேரம், சின்னச்சிறு கிளியே, நான் புடிச்ச மாப்பிள்ள, விளக்கு வைச்ச என ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம். படத்திற்கு வசனங்களுக்கும் அதிக வெயிட்டேஜ் கொடுத்து. படத்தோடு ஒன்றியே இருந்த காமெடியும் இன்றும் பிரபலம். அதிலும் முருங்கைக்காய் வைச்சு அவர் சொன்ன மேட்டர் இருக்கே அதை என்றும் ரசிகர்கள் மறக்க முடியாது.
பொன்விழா படம்:
படம் முழுக்க பாக்யராஜ் முடிச்சு இருந்து கொண்டே இருக்கும் அது தான் 'முந்தானை முடிச்சு'. 100 நாட்களுக்கும் மேலாக திரையரங்குளில் ஹவுஸ்புல் காட்சிகள், ரிப்பீடட் ஆடியன்ஸ் என படத்தை வேற லெவலுக்கு எடுத்து கொண்டு போனது இந்த பொன்விழா கொண்டாடிய 'முந்தானை முடிச்சு'.