பெற்றோர் வாழ்ந்த டெல்லி வீட்டை ரூ.23 கோடிக்கு விற்றுள்ளார் அமிதாப்பச்சன். இந்த வீட்டை வாங்கிய நபர் அதைத் தரைமட்டமாக்கப் போகிறாராம்.


டெல்லியின் குல்மொஹர் பூங்கா பகுதியில் தான் இந்த வீடு அமைந்துள்ளது. இதுதான் அமிதாப் பச்சனின் தந்தை ஹரிவன்ஷ் ராய் பச்சன் மற்றும் தாய் தேஜி பச்சன் முதன்முதலில் வாங்கிய வீடு. இந்த வீட்டிற்கு அவர்கள் சோப்பன் என்று பெயர் வைத்திருந்தனர். இந்நிலையில் இந்த வீட்டை ரூ.23 கோடிக்கு அமிதாப் பச்சன் விற்றுள்ளார். நியோஜோன் குரூப் ஆஃப் கம்பெனிஸ் சிஇஓ அவ்னி பாதர் தான் வீட்டை வாங்கியுள்ளார். இவர் அந்த வீட்டின் அருகில் தான் கடந்த 35 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார். 


வீடு மொத்தம் 418.05 சதுர மீட்டர் அளவுடையது. வீட்டை விற்பதற்கான டீல் கடந்த டிசம்பர் 7 ஆம் தேதியே ஒப்பந்தமாகிவிட்டது. வீட்டை வாங்கிய அவ்னி, இந்த வீடு மிகவும் பழமையான கட்டுமானம். ஆகையால் நவீன காலத்திற்கே ஏற்ப வீட்டை கட்டுவதற்கு ஏதுவாக அந்த வீட்டை இடிக்க உள்ளேன் என்றார்.


டெல்லியில் பிரம்மாண்ட சொகுசு வீடுகளின் இடைத்தரகரான பிரதீப் பிரஜபதி கூறுகையில், “அமிதாபின் பெற்றோர் இந்த வீட்டில் வசித்த வரை, இந்தப் பகுதியே எப்போதும் பரபரப்பாக இருந்தது. ரசிகர்கள் கூட்டம் ஆரவாரமாக இருக்கும். ஆனால், அமிதாபின் பெற்றோர் அவருடைய மும்பை வீட்டுக்குப் பெயர்ந்த பின்னர் அந்த வீட்டின் பக்கம் ஆளே இல்லை. இத்தனை ஆண்டுகளாக வீடு பூட்டியே தான் இருந்தது” என்று கூறினார்.


ஆனால் அமிதாப் இந்த வீட்டை விற்றிருக்கக் கூடாது என்று இணையவாசிகள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். பெற்றோரின் முதல் சொத்து அதை அவர்களின் நினைவாக வைத்திருக்கலாமே. ரூ.23 கோடியெல்லாம் அமிதாப் பச்சனுக்கு பணமே இல்லை என்று இணையவாசிகள் விமர்சிக்கின்றனர்.


அமிதாப் பச்சன் தற்போது தனது மனைவி ஜெயா பச்சன். மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன், பேத்தி ஆராத்யா பச்சன் ஆகியோருடன் மும்பையில் வசித்து வருகிறார். இவர்களின் வீட்டின் பெயர் ஜல்ஸா. இந்த வீட்டைத் தவிர மும்பையில் அமிதாப் பச்சனுக்கு நிறைய சொத்துக்கள் உள்ளன. ஜனக் என்ற பெயரில் அவரின் அலுவலகக் கட்டிடம் உள்ளது. பர்தீக்சா, வத்ஸா என்ற பெயர்களிலும் சொத்து உள்ளது. துபாயின் பிரம்மாண்ட வில்லா உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் வம்சாவளி வீடு உள்ளது.


அமிதாப் பச்சன் நிறைய படங்களில் தற்போதும் நடித்து வருகிறார். ஜூண்ட், பிரம்மாஸ்திரா போன்ற படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றன. பிரம்மாஸ்திராவில் ரன்பீர் கபூர், ஆலியா பட் நடித்துள்ளனர். ராஷ்மிகா மந்தனாவுடன் குட்பை படத்தில் நடித்துள்ளார். ரன்வே 34 படத்தில் அமிதாப்புடன் அஜய் தேவ்கன் நடித்துள்ளார். பிரபாஸுடன் ஒரு படம். தீபிகா படுகோனேவுடன் ஒரு படத்திலும் நடிக்கின்றார்.