பாலிவுட்டின் மிகப்பிரபலமான நடிகர் அமீர்கான். இவர் தான் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்காகவும் உடலை ஏற்றியும், இறக்கியும் உடல் அமைப்பிலும், நடிப்பிலும் வித்தியாசங்களை காட்டிக்கொண்டே இருப்பார். இவருக்கு இந்தியா மட்டுமின்றி உலகளவிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரின் மெகாஹிட் படங்களில் மிகவும் முக்கியமானது ரங்தே பசாந்தி. 2006-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை இயக்கியவர் பிரபல இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மேரா. இவர் “தி ஸ்ட்ரேஞ்சர் இன் தி மிரர்” என்ற பெயரில் தனது சுயசரிதையை புத்தகமாக எழுதியுள்ளார். இந்த புத்தகம் நேற்று முன்தினம் வெளியானது. அதில், அவர் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.




அதில், அவர் அமீர்கான் பற்றி கூறியிருப்பதாவது, “ அமீர்கான் ஒரு தொலைநோக்கு பார்வையாளர். சரியாக நடந்தாலும், தவறாக நடந்தாலும் அதை அனைத்தையும் அமீர்கான் புரிந்துகொள்கிறார். சில நேரங்களில் இன்னும் 10 நாட்கள்கூட படப்பிடிப்பு நடத்தலாம் என்ற கடினமான சூழல் வந்தபோது கூட அமீர்கான் அதை ஆதரித்தார். எந்தவொரு ஈகோவும் இல்லாமல், சிறுவர்களின் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டாலும் படப்பிடிப்பில் மகிழ்ச்சியுடன் அவர் இருப்பார். அமீர்கானின் சினிமா புரிதல் எங்கள் தொழிலில் ஈடு இணையற்றது. அவரது ஒப்புதல் இல்லாவிட்டால், அக்கறையின்மை மற்றும் மந்த நிலையின் தூசியை சேகரிக்கும் மற்றொரு கனவு காண்பவரின் ஸ்கிரிப்டாக ரங்தே பசந்தி அமைந்திருக்கும்” என்று கூறியுள்ளார்.


அதே சமயத்தில், அமீர்கான் படப்பிடிப்பிற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது ஒரு நிபந்தனையை சேர்த்திருந்தார். அதாவது, தனது சம்பளம் ரூபாய் 4 கோடி என்றால், குறிப்பிட்ட நேரத்தில் படப்பிடிப்பை நடத்தி முடிக்காவிட்டால் தனது சம்பளத்தை ரூபாய் 8 கோடியாக வழங்க வேண்டும் என்று சேர்த்திருந்தார். நான் அதற்கு முன்பு 8 கோடியை பார்த்ததே இல்லை என்றும் ராகேஷ் ஓம்பிரகாஷ் தனது சுயசரிதையில் எழுதியுள்ளார்.




மேலும், இந்த படத்திற்கு முதலில் இசையமைப்பதற்கு அவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை தேர்வு செய்யவில்லை. பீட்டர் கேப்ரியல் என்ற ஆங்கில இசையமைப்பாளர் நியமிப்பதற்காக பணிகள் பெரும்பாலும் முடிந்த நிலையில், பின்னர் அவரை நியமிக்க முடியவில்லை என்றும் பதிவிட்டுள்ளார். சுதந்திர காலத்திலும், நிகழ்காலத்திலும் நடைபெறுவது போலவும் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் சுதந்திர காலத்தில் பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோரை சிறையில் தூக்கில் இடும் இளம் ஆங்கிலேய ஜெயிலராக ஜேம்ஸ் மெக்கேன்லே என்ற கதாபாத்திரம் இடம்பெற்றிருக்கும். இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் தேர்வு செய்யப்பட்டவர், ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்து புகழ்பெற்றவரும், தற்போது ஜேம்ஸ் பாண்ட் பட நாயகனாக வலம் வருபவருமான டேனியல் கிரேக் என்ற இன்ப அதிர்ச்சி தகவலையும் பகிர்ந்துள்ளார்.




ஜேம்ஸ் மெக்கென்ஸி கதாபாத்திரத்திற்காக நடத்தப்பட்ட நடிகர்கள் தேர்வில் பங்கேற்ற டேனியல் கிரேக்கையே தான் முதன்முதலில் தேர்வு செய்ததாகவும், ஆனால், அவர் தன்னை அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடிப்பதற்கு பரிந்துரைத்துள்ளனர் என்பதால் சிறிது கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால், போதிய அவகாசம் இல்லாத காரணத்தால் அவர் இந்த படத்தில் இடம்பெறவில்லை என்றும் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் தனது சுயசரிதையில் தெரிவித்துள்ளார்.


அமீர்கானுடன் மாதவன், சித்தார்த் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்த இந்த படம் மாபெரும் வசூலை குவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.