உக்ரைன் அதிபர் ஜெலன்ஸிகியை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளியுள்ளார் நடிகை சமந்தா.


உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.. உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலை. இன்றுடன் ரஷ்ய ராணுவம் தாக்குதலை ஆரம்பித்து ஐந்து நாட்கள் ஆகிவிட்டன. போர்க்களத்திலிருந்து வரும் வீடியோக்களும், புகைப்படங்களும் வேதனை சாட்சியாக உள்ளன.


இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸிகியை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளியுள்ளார் நடிகை சமந்தா. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தி அட்லான்டிக் டாட் காம் என்ற இணையதளத்தில் வெளியான ஒரு செய்தியைப் பகிர்ந்துள்ளார். அந்த செய்தியில் வொலடிமிர் ஜெலஸிக்காக ஒரு பிரார்த்தனை. உக்ரைனுக்கு ஜெலன்ஸ்கி என்ற அதிபரை வரலாறு கொடுத்துள்ளது. அவரது துணிச்சல் குறிப்பிடத்தக்கது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த 5 நாட்களில் உக்ரைன் அதிபர், வீடியோ, ட்வீட், அறிக்கை என தொடர்ந்து உலக நாடுகளுடன் தொடர்பில் இருக்கிறார். அவரது கருத்துகள் ஒவ்வொன்றுமே ரஷ்ய தாக்குதலை நினைத்து அஞ்சவில்லை. சுதந்திர உக்ரைனே எங்கள் நோக்கம். போராட்டம் தொடரும் ஆகிய கருத்துகளைத் தெரிவிப்பதாக மட்டுமே உள்ளன.
இன்று பெலாரஸில் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலிலும் கூட ஓர் அறிக்கை வாயிலாக ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனுக்கு அவசரப் பிரதிநிதித்துவம் வேண்டும். ரஷ்யப் படைகள் பின்வாங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஆயுதங்களைப் போட்டுவிட்டு ஓடிவிடுங்கள் என்று ரஷ்யப் படைகளை எச்சரித்துள்ளார்.


அவரது துணிச்சலுக்கு பாராட்டும் விமர்சன்மும் ஒரு சேர எழுந்துள்ளன. ஒரு சிலர் ஜெலன்ஸ்கியின் வீரத்தைப் பாராட்ட, இன்னொருபுறம் ரஷ்யா அணு ஆயுத தாக்குதலுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் வீராப்பு பேசி சாமான்ய மக்களின் உயிரைப் பணையம் வைக்கிறார். நேட்டோவின் கைக்கூலியாக இருக்கிறார். அமெரிக்காவின் கைப்பாவையாக இருக்கிறார் என்ற விமர்சனங்களும் எழாமல் இல்லை. 


இந்நிலையில்தான் சமந்தா, உக்ரைன் அதிபரை ஏகத்துக்கும் புகழ்ந்திருக்கிறார். அதேபோல் தமிழ்ப் படங்களில் நடித்துள்ள பிரிட்டன் நடிகை எமி ஜாக்சன், உக்ரைனில் உள்ள குழந்தைகளின் நலன் பேணப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


இதனிடையே நடிகை சமந்தா திரையுலகில் கால்பதித்து 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், 'நான் திரையுலகில் 12-வது ஆண்டை நிறைவு செய்கிறேன். இந்த 12 ஆண்டு கால நினைவுகளும் லைட்ஸ், கேமரா, ஆக்‌ஷன் என்று ஒப்பற்ற தருணங்களைச் சுற்றி உள்ளன. இந்த ஆசீர்வதிக்கப்பட்ட பயணம் மற்றும் உலகின் சிறந்த, நேர்மையான ரசிகர்களை பெற்றதற்காக நான் நன்றியுடன் இருக்கிறேன்!' என்று தெரிவித்திருந்தார். 


சமந்தா, தற்போது தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல், தெலுங்கில் யசோதா, சகுந்தலா போன்ற படங்களில் நடித்துவிட்டு அதன் ரிலீஸுக்காகக் காத்திருக்கிறார்.